“ ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா?”- வருமான வரித்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு | chennai high court question about jayalalitha assets

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (08/01/2019)

கடைசி தொடர்பு:08:29 (08/01/2019)

“ ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா?”- வருமான வரித்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கான வாரிசுகள் நாங்கள்தான் என, ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா, தீபக் ஆகிய இருவரும்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவருடைய சொத்துகளை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. அதேபோல,  ஜெயலலிதாவின் பேரில் உள்ள 913 கோடி ரூபாய் மதிப்பிலான  சொத்துகளைப் பராமரிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி என்பவர், சென்னை கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஜெயலலிதா

அந்த வழக்கை கீழமை நீதிமன்றம்  தள்ளுபடிசெய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ ஏற்கெனவே, சொத்துகளின் வாரிசுகள் என தீபா, தீபக் என இருவரும் வழக்கு தொடர்ந்திருப்பதால், அவர்கள் தரப்பில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் . ஜெயலலிதாவின் சொத்துகள் என கணக்குக் காட்டியிருப்பது, அவர் தேர்தல் காலத்தில் சமர்ப்பித்த சொத்துகளின் மதிப்பா அல்லது சொத்துக் குவிப்பு வழக்கில் வருமானத்திற்கு  அதிகமான சொத்துகளா... எந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகள் நியமிக்க வேண்டும். அதேபோல, ஜெயலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கப்போவது யார்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், “ ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளதா? எனப் பதிலளிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.