வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (08/01/2019)

கடைசி தொடர்பு:10:48 (08/01/2019)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு 144 தடை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு!

பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை 9-ம் தேதி மாலை 6 மணி முதல் 11-ம் தேதி காலை 6 மணி வரை  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் துாத்துக்குடி மாவட்டத்தில்  144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தீப் நந்தூரி

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியில், வரும் 10-ம் தேதி, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின்  நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்திடும் வகையில் தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் நாளை 9-ம் தேதி மாலை 6 மணி முதல் 11-ம் தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை

இந்தக் காலத்தில், தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருதல், ஊர்வலம் நடத்துதல், வாள், கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆயுதங்கள் கொண்டுவருவதற்கும், கட்சி மற்றும் சமுதாயக் கொடிகள் கொண்டுவருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு பள்ளி, கல்லூரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காகச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தாது” என்று குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க