வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (08/01/2019)

கடைசி தொடர்பு:11:28 (08/01/2019)

`பலமுறை அதை நினைத்து வருந்தினேன்!' - மாணவர்கள் மத்தியில் சத்யராஜ் பேச்சு

``சாதாரண மக்கள்கூட கல்வி அறிவு இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்'' என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.

திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில்  கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் பேசுகையில், ``இன்றைய அவசர உலகில் இளைஞர்கள் எல்லோரும் பல்வேறுபட்ட தவறான சிந்தனைகளால் கல்வியைப் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால், கல்வி அறிவே எல்லா வகையிலும் நல்ல வாழ்க்கையைத் தரும். சாதாரண மக்கள்கூட கல்வி அறிவு இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். அதேபோல, பட்டறிவும் சிறந்ததுதான் என்று காமராஜர், தந்தை பெரியார் போன்றோர் சொல்லியிருக்கிறார்கள்.

சத்யராஜ்

அனுபவ அறிவு, வயதாகி முதிர்ச்சியடைந்த பிறகு வந்தது என்றால், ஒருவேளை அதில் பயன் இருக்கலாம். ஆனால், பள்ளியில் படிக்கும் வயதில் கவனித்து கற்றுக்கொண்டால்தான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற பயிற்சி கிடைக்கும். பள்ளியில் படிக்கும் வயதில் அப்படி மனதை ஒருமுகப்படுத்திப் பழகிவிட்டால், பின்னர் வரும் வாழ்நாள் முழுவதும் நல்ல நிலையில் நமது மனதைச் செம்மையாக வைத்திருக்க முடியும். இல்லையென்றால், நாம் எந்த வேலைக்குச் சென்றாலும் கவனம் தப்பினால் மரணம் என்பதே நம் வாழ்க்கைநிலை ஆகிவிடும். குதிரை ஏற்றப்பயிற்சி என்பது பழகிவிட்டால், மிகச் சுலபமான வி‌ஷயம்தான். ஆனால், குதிரை ஏற்றத்தைப் பழகாத ஒருவர் குதிரைமீது ஏறினால், அவர் கீழே விழுந்து விடுவார்.

ஒரு மாணவருக்கு படிப்பில் திறமை உள்ளதென்றால், அவர் படிப்பில் சிறந்து விளங்கட்டும். அதே சமயம், விளையாட்டில் உரிய பயிற்சிகளைக் கொடுத்தால், மற்றொரு மாணவர் விளையாட்டில் முன்னேறுவார். இதுபோன்ற வாய்ப்புகள் எல்லாம் நாங்கள் படிக்கும்போது கிடைக்கவில்லை. பள்ளியில் படிக்கும் வயதில் சரியாகப் படிக்காததால், பிற்காலத்தில் நான் பலமுறை அதை நினைத்து வருந்தினேன்.

பள்ளிவிழாவில் சத்யராஜ் பேசினார்

ஒருவர் நடிகராக வேண்டும் என்றால்கூட அதற்கென்று கல்வி நிலையங்கள் உள்ளன. அதில் முறைப்படி கற்று வருபவர்கள், எங்களைவிட நன்றாக நடிக்கின்றனர். அது பற்றிய அறிவு இல்லாததால், வெறும் அனுபவத்தைக்கொண்டே நாங்கள் நடித்துவருகிறோம். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் பயிற்சியும் முயற்சியும் இல்லாவிட்டால், வருகின்ற தோல்விகள், காலத்தையும் நேரத்தையும் விரயமாக்கிவிடும். அதற்குப் பிறகு, முயற்சி என்பது பலன் அளிக்காது போய்விடும். அந்தந்த வயதில் படித்து முடித்து, அந்தந்த வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும்.

எல்லா வகையான பயிற்சிகளையும் கற்றுத்தருவது உங்களுக்கெல்லாம் கிடைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். அதில், உங்களுக்கென்று எந்தத் திறமை இருக்கிறதென்று உரிய முறையில் தேர்வுகள் வைத்துக் கண்டறிந்து, அதற்கேற்றபடி இங்கே கற்றுத் தரப்படுவது குறித்து அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சியடையவேண்டிய ஒரு பயிற்சிமுறை இதுதான். மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க