இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது! - புத்தாண்டிலும் தொடரும் சோகம் | Four more fishermen arrested by Sri Lankan Navy

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (08/01/2019)

கடைசி தொடர்பு:11:50 (08/01/2019)

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது! - புத்தாண்டிலும் தொடரும் சோகம்

புது வருடம் பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து சிறைப்பிடித்து செல்லப்பட்ட சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதா பட்டினம் மீனவர்கள்

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடித்து செல்லப்படும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. புதிய ஆண்டு பிறந்து  ஏழே நாள்களில், 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, 7 நாட்டுப்படகுகள் உள்ளிட்ட 24 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இவற்றில், மீன்பிடிக்கச் சென்ற 142 மீனவர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர், இன்று வரை இலங்கைச் சிறையில் இருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சென்ற படகு பழுதடைந்தது.  அதனால், கரை திரும்ப முடியாமல் கடலில் தவித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களையும் திங்கள்கிழமை அதிகாலை சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை வரும் 10-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். ஜோசப் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகியோர், நேற்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், இலங்கைக் கடற்பகுதியான நெடுந்தீவு கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி வந்துள்ளதாகக் கூறி சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள், காரை நகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

புத்தாண்டின் தொடக்கத்திலேயே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடுத்தடுத்து சிறைப்பிடித்துச் செல்லப்படும் சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.