பிந்துவின் மகள் சந்தித்த பிரச்னைகள்! - தமிழகப் பள்ளியில் மகளை சேர்க்க முடியாமல் தவிப்பு | bindhu' s daughter faces lot of problems in school

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (08/01/2019)

கடைசி தொடர்பு:12:10 (08/01/2019)

பிந்துவின் மகள் சந்தித்த பிரச்னைகள்! - தமிழகப் பள்ளியில் மகளை சேர்க்க முடியாமல் தவிப்பு

பரிமலை கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து கனகதுர்கா, பிந்து இருவரும் சபரிமலை கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். பெண்கள் சபரிமலையில் வழிபட்டதைத் தொடர்ந்து, கேரளாவில் வன்முறை வெடித்தது. கோழிக்கோடு மாவட்டத்தில்  அரசுப் பள்ளி ஒன்றில் பிந்து ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்தார். சபரிமலைக்குச் சென்றதையடுத்து பள்ளியில் பணிபுரிய எதிர்ப்புக் கிளம்பியது.  அதனால், கேரள அரசு அவரை பாலக்காடு மாவட்டம் அகழி அருகேயுள்ள சம்பர்பூர் பள்ளிக்கு மாற்றல்செய்தது. தற்போது பிந்து, அகழி அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவருகிறார். அகழி சுற்றுவட்டாரப் பகுதி, பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதி என்பதால், அவருக்கு இங்கு பிரச்னை இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால், அகழியிலும்  பிந்துவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

சபரிமலை ஏறிய பிந்து

அகழி அருகேயுள்ள ஆனைகட்டியில் உள்ள வித்யாவனம் பள்ளியில் தன் மகளைச் சேர்க்க ஆசிரியை பிந்து நேற்று வந்துள்ளார். வித்யாவனம் பள்ளிக்கு அவர்  வந்த தகவல் அறிந்து, பள்ளியின் முன்புற வாசல் முன் அக்கம்பக்கத்து மக்கள்  கூடிவிட்டனர். இதனால், பிந்துவால் பள்ளியில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, பள்ளியின் பின்புற வழியாக  மகளுடன்  அவர் வெளியேறியுள்ளார்.  வித்யாவனம் பள்ளி இயக்குநர் பிரேமா, 'பிந்துவின் மகளை தங்கள் பள்ளியில் சேர்ப்பதுகுறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார். 

சபரிமலை ஏறிய ஆசிரியை

பிந்துவின் 11 வயது மகள், அவர் பணிபுரிந்த அகழி பள்ளியில்தான் படித்துள்ளார். அங்கே, சக மாணவர்கள்  அந்தச் சிறுமியை  புறக்கணித்துள்ளனர். மனத்தளவில் சோர்வடையச் செய்துள்ளனர்.  இதனால், கோவை மாவட்டம், ஆனைகட்டியில் உள்ள வித்யாவனம் பள்ளியில் மகளைச் சேர்க்க அவர் முடிவு எடுத்துள்ளார். வித்யாவனம் பள்ளிக்குச் செல்வதாகத் தன் பள்ளி வாட்ஸ்-அப் குரூப்பில் தகவல் பதிந்துள்ளார். உடன் பணிபுரியும் ஆசிரியர்கள், இந்தத் தகவலை வெளியே கசியச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.  'முதலில், என் மகளை பள்ளியில் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டார்கள். தற்போது,  திடீரென்று மறுக்கிறார்கள். பள்ளியில் என் குழந்தையைச் சேர்த்தால் அசாதாரணச் சூழல் ஏற்படும் என்று பதில் சொல்கிறார்கள். நான் பள்ளியைக் குறை கூற விரும்பவில்லை'' என்று பிந்து வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க