வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (08/01/2019)

கடைசி தொடர்பு:11:46 (08/01/2019)

சஞ்சய் தத்தை நேரில் அழைத்து விசாரணை!  - பேரறிவாளன் வழக்கில் `கறார்' காட்டிய தகவல் ஆணையம்

`தடா சட்டப்படி ராஜீவ் கொலை வழக்கு குற்றமாகாது' என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், `சி.பி.ஐ-யால் விசாரணை செய்யப்பட்டது' என்ற காரணத்தை வைத்து, `தனக்குத்தான் அதிகாரம் உண்டு' என வாதிட்ட மத்திய அரசு, நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்து இதுவரையில் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. 

` நடிகர் சஞ்சய் தத்தை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும்' என பேரறிவாளன் மனுவின் மீது உத்தரவிட்டுள்ளது மகாராஷ்ட்ரா மாநில தகவல் ஆணையம். ` தகவல் அறியும் உரிமை சட்டப்படி, பொதுத் தகவல் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிவிட்டார்' எனவும் ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. 

பேரறிவாளன் மனு

உலகையே உலுக்கிய 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் 257 நபர்கள் மரணம் அடைந்தனர். 2000-த்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் கைதான சஞ்சய் தத், தடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆயுதச் சட்டத்தின்படி 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். பின்னர், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தடா சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு, சி.பி.ஐ-யால் விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகளாகத் தண்டனைக் குறைப்பு பெற்ற சஞ்சய் தத், மேலும் தண்டனைக் கழிவு வழங்கப்பட்டு 25.02.2016 அன்று மகாராஷ்ட்ர மாநில எரவாடா சிறையிலிருந்து முன்விடுதலை செய்யப்பட்டார். `தடா, ஆயுதச்சட்டம் போன்ற மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டங்களின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளுக்கு மத்திய அரசு மட்டுமே தண்டனைக் கழிவு வழங்க முடியும்' என 02.12.2015 அன்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் அடங்கிய அரசியல் அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில்,  மாநில அரசால் சஞ்சய் தத் முன்விடுதலை செய்யப்பட்டது சர்ச்சையை எழுப்பியது. 

சஞ்சய் தத், பேரறிவாளன்

இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில், அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். ` நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்த ஆவணங்கள் வெளியானால், ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ளவர்களது விடுதலையும் சாத்தியமாகும்' என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆனால், தொடர்ந்து இதுகுறித்த தகவலைத் தர மறுத்து வருகின்றனர் எரவாடா சிறை அதிகாரிகள். `தடா சட்டப்படி ராஜீவ் கொலை வழக்கு குற்றமாகாது' என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், `சி.பி.ஐ-யால் விசாரணை செய்யப்பட்டது' என்ற காரணத்தை வைத்து, `தனக்குத்தான் அதிகாரம் உண்டு' என வாதிட்ட மத்திய அரசு, நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்து இதுவரையில் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. 

பேரறிவாளன் மனு

இதுகுறித்து கடந்த 24.03.2016 அன்று 5 கேள்விகளை உள்ளடக்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எரவாடா சிறைக்குப் பேரறிவாளன் விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். தகவல் அலுவலர் தகவல் தர மறுத்த நிலையில், 04.05.2016 அன்று பேரறிவாளன் துறைரீதியாக முதல் மேல்முறையீடு செய்தார். இதன்பின்னர், 17.05.2016 தேதியிட்டு பேரறிவாளனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார் எரவாடா சிறையில் தகவல் அலுவலர். அந்தக் கடிதத்தில், `பேரறிவாளன் கேட்ட கேள்விகள் மூன்றாம் நபர் தொடர்பானது என்பதால் தர முடியாது' என மறுத்திருந்தார். மீண்டும், இதுகுறித்து மேல்முறையீட்டு அலுவலரிடம் 02.06.2016 அன்று பேரறிவாளன் தனது நியாயங்களை எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து பேரறிவாளன் சார்பில் வழக்குறைஞர் நிலேஷ் உகே மேல் முறையீட்டு அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி கருத்துகளை எடுத்து வைத்தார். 

பேரறிவாளன்

இந்த விசாரணையின்போது சஞ்சய் தத் அளித்த கடிதம் ஒன்றை எரவாடா சிறை அதிகாரி சமர்ப்பித்தார். அந்தக் கடிதத்தில், `தனது தகவல்களை வழங்கக் கூடாது' என சஞ்சய் தத் குறிப்பிட்டிருந்ததை அந்த அதிகாரி சுட்டிக்காட்டி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் நிலேஷ் உகே, `அப்படியெனில் மாநில அரசை ஒரு கைதிதான் வழிநடத்துகிறாரா?' எனக் கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாகப் பேசிய வழக்கறிஞர் பாரிவேந்தன், ஆவணங்களை வழங்க வேண்டியது சட்டக் கடமை என்பதற்கு ஆதரவாக 14.08.2018 அன்று மத்திய தகவல் ஆணையம் வழங்கிய உத்தரவு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை சுட்டிக்காட்டி வாதிட்டார். அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட மாநிலத் தகவல் ஆணையர், `உத்தரவு பின்னர் வழங்கப்படும்' எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

இந்த நிலையில், ` சஞ்சய் தத்தை நேரில் விசாரிக்காமல் பேரறிவாளனின் மனுவை நிராகரித்தது தவறு. மீண்டும் முறைப்படி அவரை விசாரிக்க வேண்டும்' எனக் கூறி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது மகாராஷ்ட்ர மாநில தகவல் ஆணையம். இதுகுறித்து நம்மிடம் பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார், `` எரவாடா சிறைக்கு பேரறிவாளன் அனுப்பிய கடிதத்தில், ` சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்ட அந்த வழக்கில் நடிகரை முன்கூட்டியே விடுதலை செய்ய என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது. எந்த சட்டங்களின் கீழ் முன்விடுதலை செய்யப்பட்டார். முன்விடுதலைக்கு முன்பு மத்திய அரசிடம் ஆலோசனை செய்யப்பட்டதா என்ற விவரங்களைக் கேட்டு மனு கொடுத்திருந்தார்.

இந்த மனுவுக்கு எரவாடா சிறை அதிகாரிகள் உரிய பதிலைத் தராமல் காலம் தாழ்த்தியதால் மேல்முறையீடு செய்தோம். இந்த வழக்கில், பொதுத் தகவல் அலுவலர், உரிய சட்டங்களின்படி நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிவிட்டார் என்பதால் மீண்டும் உரிய சட்டங்களின்படி கோரிக்கை மனு விசாரிக்கப்பட வேண்டும். அப்படியும் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், 12.04.2019 அன்று மீண்டும் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்னர். சஞ்சய் தத் விடுதலை தொடர்பான ஆவணங்கள் வெளியாகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்" என்றார் நம்பிக்கையோடு.