வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (08/01/2019)

கடைசி தொடர்பு:12:11 (08/01/2019)

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராகத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவும், அதற்கு மீண்டும் மின்சாரம் வழங்கவும் வேண்டுமென்று உத்தரவிட்டது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். இந்தத் தீர்ப்பு மக்களுக்கு எதிரானது என்றும், ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படக் கூடாதென்றும் தூத்துக்குடி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தீர்ப்பு வந்ததையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடிகளைக் கட்டி அந்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பல வருடங்களாகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தது. அந்தப் போராட்டத்தின் உச்சகட்டமாகத் தூத்துக்குடி மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் பேரணியாகச் சென்றனர். அந்தப் போராட்டத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. பசுமைத் தீர்ப்பாயத்தில் அவர்களின் உயிர்த் தியாகங்கள் மதிக்கப்படவில்லை. இவை அனைத்தையும் மீறி ஆலையைத் திறக்குமாறு வந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஃபாத்திமா பாபு மற்றும் வழக்கறிஞர் வைகை ஆகியோர் தொடர்ந்த அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில் தங்கள் தரப்பு நியாயங்கள் முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்றும், மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். சட்டவிரோதமாகச் செயல்பட்ட ஸ்டெலைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்றும் ஆலையைத் திறக்குமாறு வந்த உத்தரவை ரத்து செய்யுமாறும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வருகின்ற ஜனவரி 21-ம் தேதிவரை ஆலையைத் திறக்க தடை விதித்திருந்தது.

இந்நிலையில், அந்த வழக்கை எடுத்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. அந்த விசாரணையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை ரத்துசெய்து உத்தரவிட்டது. இதனால், மீண்டும் ஆலையைத் திறப்பதில் இருந்த தடை நீக்கப்படுகிறது.