வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (08/01/2019)

கடைசி தொடர்பு:13:15 (08/01/2019)

நாளை, பாம்பை கடித்துத் தின்னும் போராட்டம்! - அய்யாக்கண்ணு அறிவிப்பு

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர கோரி, விருத்தாசலத்தில் விவசாயிகள் நாமம் போட்டு காதில் பூவைத்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர். `நாளை, பாம்பை கடித்துத்தின்னும் போராட்டம் நடத்தப்படும்' எனவும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.  

காதில் பூவைத்து அய்யாக்கண்ணு போராட்டம்

விருத்தாசலம் பாலக்கரையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய கரும்பு நிலுவைத் தொகையைக் கேட்டுக் காத்திருக்கும் போராட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். இதில், 2016-17  மற்றும் 2017 -18-ம் ஆண்டுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பின் கிரயத் தொகையை வழங்காத ஆலை நிர்வாகத்திடமிருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும், ஐந்து ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள பாக்கித் தொகை ரூ.93 கோடியை உடனே வழங்கிட வேண்டும் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி காத்திருக்கும் போராட்டம் நேற்று காலை தொடங்கியது.

 இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது. இன்று காலை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்  சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், உடலில் நாமம் அணிந்து காதில் பூவைத்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்றும், நாளை பாம்பை கடித்துத்தின்னும் போராட்டம் நடைபெறும் எனவும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.