`இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதி!'- மத்திய அரசைச் சாடும் தமிழகத் தலைவர்கள் |  Tamilnadu politicians slams modi government over reservation policy 

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (08/01/2019)

கடைசி தொடர்பு:13:01 (08/01/2019)

`இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதி!'- மத்திய அரசைச் சாடும் தமிழகத் தலைவர்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 

மத்திய அரசு
 

அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், 1000 சதுர அடிக்குக் குறைவாக வீடு வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நகராட்சிக்குட்பட்ட இடத்தில் 1000 சதுர அடிக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள், நகராட்சி அல்லாத இடத்தில் 2000 சதுர அடிக்கு வீட்டு மனை வைத்திருப்பவர்கள் ஆகியோர், இந்த இடஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த நகர்வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் இதை அறிவித்தது பா.ஜ.க-வின் சொந்த ஆதாயத்துக்காகத்தான் என விமர்சித்துள்ளன.

இட ஒதுக்கீடு
 

தி.மு.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  

 இதுதொடர்பாக சட்டப்பேரவையில்  இன்று பேசிய  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  ``பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு தவறானது. இது சமூக நீதிக்கு எதிரானது. லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, ``பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார். 

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எஸ்சி/எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை கொஞ்சம்கொஞ்சமாக சிதைத்துவருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை  அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. உண்மையில் இது, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட்டம் ஆகும் என சுட்டிக்காட்டுகிறோம். தேர்தல் ஆதாயத்திற்காக, முற்பட்ட வகுப்பினரை ஏமாற்றும் இந்த மோசடி முயற்சியைக் கைவிட வேண்டுமென பா.ஜ.க அரசை வலியுறுத்துகிறோம்.

மோடி
 

இடஒதுக்கீடு என்பது வெறும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதல்ல. பல நூறு ஆண்டுகளாக நிலவிவரும் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமத்துவ நோக்கில் வழங்கப்படுவதாகும். இதை, உச்ச நீதிமன்றம் இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பு உட்பட, பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராக இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பா.ஜ.க அரசு, நீதித்துறையை மதிக்காதது மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எஸ்சி/எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைக் கொஞ்சம்கொஞ்சமாக சிதைத்துவருகிறது. இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாகக் கூறாமலேயே, அதை முடக்கிக்கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார அளவுகோலை வைப்பதன்மூலம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்க நினைக்கிறது. 

முற்பட்ட வகுப்பினருக்கு உதவுவதுபோல பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் உண்மையில் அவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டதேயாகும். பா.ஜ.க தோல்வி பயத்தில் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எவரும் ஏமாற மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க