வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (08/01/2019)

கடைசி தொடர்பு:14:00 (08/01/2019)

ஒரே மகனை பறிகொடுத்துக் கதறிய தாய்: நேரில் சென்று உதவிய கலெக்டரின் மனிதநேயம்!

நெல்லை மாவட்டத்தில், மது போதையில் சென்ற இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஆதரவற்ற நிலையில் கதறித்துடித்த தாயை நேரில் சென்று சந்தித்த நெல்லை கலெக்டர், முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கான ஆணை வழங்கிய மனிதநேயம் பாராட்டைப் பெற்றுள்ளது.

பழனிக்குமார் உடல் உறுப்பு தானம்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரான பழனிக்குமார், கடந்த 2-ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். தனது நண்பருடன் கடைக்குச் சென்றபோது, எதிரில் குடிபோதையில் ஒரே பைக்கில் 3 பேருடன் வேகமாக வந்த பைக் மோதியது. அதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிக்குமார், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் மூளைச்சாவு அடைந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்து, ஒரே மகனையும் இழந்ததால், தாய் சாரதா கதறித்துடித்தார். அவரது உடலின் பாகங்களைத் தேவை இருக்கும் நோயாளிகளுக்கு வழங்க அவர் முன்வந்ததால், பழனிக்குமாரின் உடல் பாகங்களை மருத்துவக்கல்லூரி மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சைமூலம் அகற்றினார்கள். 

பழனிக்குமாரின் இதயம், இரு கிட்னிகள், கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை எடுக்கப்பட்டன. அவரது இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மதுரையில் உள்ள ஒரு நோயாளிக்கு ஒரு கிட்னி பொருத்தப்பட்டது. மற்றொரு கிட்னியை பாளையங்கோட்டையில் உள்ள நோயாளிக்கு ஆபரேஷன் மூலம் மருத்துவர்கள் பொருத்தினார்கள். தோல் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. அவற்றைப் பெற்ற நோயாளிகள், தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலெக்டரின் மனிதநேயம்

இந்த நிலையில், தனக்கான ஒரே ஆதரவையும் இழந்து தவித்த தாய் சாரதா மற்றும் சமூக ஆர்வலர்கள், நெல்லை ஆட்சியரைச் சந்தித்து மகனை இழந்தவருக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதை ஏற்றுக் கொண்ட நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், அம்பாசமுத்திரம் சென்று, பழனிக்குமாரின் தாய் சாரதாவை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், அவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆர்டரை அளித்தார். ஆட்சியரின் இந்த மனிதநேய உணர்வை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.