வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (08/01/2019)

கடைசி தொடர்பு:18:14 (10/01/2019)

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

``அந்தச் சிலை கர்நாடக அரசுக்காகக் கூட எடுத்துச் செல்லப்படவில்லை. ஒரு தனியார் நிறுவனத்துக்காக மரங்களை வெட்டிக் குவிக்கிறார்கள். பாரபட்சம் பாராமல் கிரிவலப்பாதை மரங்களை வெட்டி அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாமே பல வருடங்களான விலையுயர்ந்த மரங்கள். மரங்களை வெட்டிக் கொண்டுபோகும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா அந்தச் சிலை?"

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலையையே லிங்கமாகக் கருதி பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். `மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், பக்தர்கள் இடையூறு இல்லாமல் கிரிவலம் செல்ல கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யப்படும்’ என முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு 110-விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் `திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கிரிவலப் பாதை 7 மீட்டர் அகலமாக இருக்கிறது, அதனை 10 மீட்டராக மாற்றப்படும்; பக்தர்களுக்குத் தங்கும் வசதிகளும் செய்துதரப்படும். இதன் மொத்த மதிப்பு ரூ.65 கோடி' எனக் குறிப்பிட்டிருந்தார்.

பெருமாள் சிலை

இதனையடுத்து, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நெடுஞ்சாலைத்துறை கிரிவலப்பாதை அகலப்படுத்துவதற்காகப் பாதையை நேரில் ஆய்வு செய்தது. அதன் முதற்கட்டமாக நெடுஞ்சாலைத் துறையினர் கிரிவலப்பாதையில் உள்ள மரங்களையும், மூலிகைச் செடிகளையும் வெட்டி வேரோடு சாய்த்தனர். 

இந்த விரிவாக்கம், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அப்போதே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் கலெக்டரிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஞானசேகரன், பணியினைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால், பணி நேற்று தொடர்ந்து நடைபெற்று வந்தது. சில சமூக ஆர்வலர்கள் சென்று கேள்வி கேட்டவுடன் தற்காலிகமாக நிறுத்துவது போல நிறுத்திவிட்டு, மீண்டும் பணி இரவு, பகலாகத் தொடர்ந்தது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்டக்கூடாது எனத் தடுத்தனர். ஆனால் மரம் வெட்டுவோர் மட்டும் தங்களது வேலையை நிறுத்தியதாகத் தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து, தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை செய்தது. அப்போது தடைவிதித்த பசுமைத் தீர்ப்பாயம், ஒரு சில நிபந்தனைகளுடன் பணிகள் மீதான தடையை விலக்கியது. அதில் `ஒரு மரத்தைக்கூட வெட்டாமல், விரிவாக்கம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட வனத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் பணிகளை அவ்வாறே செய்ய அனுமதித்தது. அதன்படி பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய, திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் செந்தமிழ் அரசு, ``கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டாமல் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பணிகள் நடைபெற்று வந்துகொண்டிருந்தன. அது முடிந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள அசுரக்கோட்டை எனும் கிராமத்தில் 108 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட கோதண்டராமர் சிலை வெட்டி எடுக்கப்பட்டு 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வந்தவாசியிலிருந்து காஞ்சிபுரம் மிக அருகில்தான் இருக்கிறது. காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் எளிதாகப் பயணிக்கலாம். அதனால் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கு அனுமதி தரவில்லை. முழுக்க முழுக்க மாநில அரசின் தயவோடு நடந்து கொண்டிருக்கிறது. இதற்காகப் பல மரங்களை நேற்று இரவோடு இரவாக வெட்டியிருக்கிறார்கள். நடுவிலுள்ள சென்டர்மீடியன்களை வெட்டி அகற்றுகிறார்கள்.

திருவண்ணாமலை

இதையெல்லாம் விடத் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டி சிலையை எடுத்துச் சென்றிருக்கின்றனர். மரங்களை வெட்டி எடுக்க பசுமைத் தீர்ப்பாயத் தென்மண்டல அமர்வு தடை விதித்திருக்கும் நிலையில் ஒரு சிலைக்காக மரங்களை எப்படி வெட்டி எடுக்க முடியும். இதற்கு காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் துணையாக இருக்கின்றனர். அந்தச் சிலை கர்நாடக அரசுக்காகக் கூட எடுத்துச் செல்லப்படவில்லை. ஒரு தனியார் நிறுவனத்துக்காக மரங்களை வெட்டிக் குவிக்கிறார்கள். பாரபட்சம் பாராமல் கிரிவலப்பாதை மரங்களை வெட்டி அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாமே பல வருடங்களான விலையுயர்ந்த மரங்கள். மரங்களை வெட்டிக் கொண்டுபோகும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா அந்தச் சிலை? அந்த மரங்களைக் காக்க எங்களால் ஆன முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்" என்றார்.

இப்படியே ஒவ்வொரு காரணத்துக்காக மரங்களை வெட்டிக்கொண்டு போனால், கிரிவலப்பாதையில் மரங்களே இருக்காது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து இருக்கும் நிலையில் மரங்களை எப்படி வெட்ட முடியும் என்ற கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. கிரிவலப்பாதை மரங்களின் மீது அதிகாரிகளுக்கு என்ன கோபமோ தெரியவில்லை.

இதுபற்றி பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தனஞ்செயன், ``மரங்களை வெட்டுவதற்கு முறையான அனுமதியோ அல்லது ஏலமோ விடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்துதான் மரங்களை வெட்ட வேண்டும். ஆனால், கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டத் தடை இருக்கிறது. கோர்ட் உத்தரவினை மீறி சிலைகளை கொண்டு செல்ல தடையாக இருந்த அனைத்து மரங்களையும் வெட்டித் தள்ளியிருக்கிறார்கள். இந்த முறைகேடான செயலை மாவட்ட ஆட்சியரும், தாசில்தாரும் கண்டுகொள்ளவில்லை. இதை ஒரு ஆன்மிக சேவையாகப் பார்க்கிறார்கள். இதை கர்நாடக அரசே கேட்டால் கூட விலையுயர்ந்த பாறையைக் கொடுத்திருக்கக் கூடாது. அங்கிருந்து ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வர முடியாது. 400 டன் கொண்ட பாறையை வெட்டி எடுத்து கர்நாடகாவுக்கு அனுப்புகிறது, தமிழக அரசு. இது முழுக்க முழுக்க தமிழக அரசின் மெத்தனப்போக்குதான்" என்றார்.

`மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகம் புதிய மரங்களை நடுவதற்கு மட்டுமல்ல, இருக்கும் மரங்களைக் காப்பதற்கும்தான் என அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்போது புரியுமோ தெரியவில்லை. குறைந்தபட்சம் அந்தச் சிலையை எடுத்துச்செல்லும் இந்த மனிதர்களுக்காவது அந்தப் பெருமாள் இதை உணர்த்தியிருக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்