வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (08/01/2019)

கடைசி தொடர்பு:16:40 (08/01/2019)

`அமெரிக்கன் படைப்புழுவால் வாழ்வாதாரமே அழிந்துவிட்டது!' - கலெக்டரிடம் கண்கலங்கிய விவசாயிகள்

``அமெரிக்கன் படைப்புழுவால் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். நாங்கள் வாழ வழிசொல்லுங்கள் ஆட்சியரே'' என்று பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்திப் பயிருடன் விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்தனர். 

                                             பூச்சிதாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருடன் விவசாயிகள்

அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிபட்டாக்காடு ஆலந்துறையார் கட்டளை வள்ளக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரியில் சுமார் 5,000 ஏக்கருக்கும் மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நல்ல விளைச்சல் மகசூல் தரும் தருவாயில் உள்ள பருத்திப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு மற்றும் புழுடாணியா புழு மற்றும் பூச்சித் தாக்குதல் அதிக அளவில் உள்ளதால் மகசூல் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது 

                                        பருத்தி பயிருடன் விவசாயிகள்

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பருத்திப் பயிரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் வகையில் மாநில அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 50,000-க்கும் மேல் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட பருத்திப் பயிர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு வேளாண்மை அதிகாரிகள் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்திட வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள்

தரமற்ற பருத்திவிதை வழங்கிய நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மட்டுமே பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட பருத்திப் பயிருடன் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் கண்கலங்கியபடி கோரிக்கை மனு அளித்தனர்.