போக்குவரத்து விதிமீறுபவர்களைக் கண்காணிக்கும் `Police Eye' ஆண்ட்ராய்டு செயலி! - கோவை போலீஸின் அசத்தல் முயற்சி | Coimbatore police launches Police eye app for identify the traffic violates

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (08/01/2019)

போக்குவரத்து விதிமீறுபவர்களைக் கண்காணிக்கும் `Police Eye' ஆண்ட்ராய்டு செயலி! - கோவை போலீஸின் அசத்தல் முயற்சி

கோவை போலீஸ்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களோடு சாலையில் சண்டையிட்டு மல்லுக்கட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவஸ்தை கோவை மக்களுக்கு இனி இல்லை. விதிமீறல்களில் ஈடுபடுபவரைத் தண்டிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது `police e eye' ஆப்.
  
நாள்தோறும் நிகழும் விபத்துகளுக்கும், போக்குவரத்து நெரிசல்களுக்குக் காரணம்  போக்குவரத்து விதிகளை மீறுவதுதான். ஒவ்வொரு வாகன ஓட்டிகள்  போக்குவரத்து விதிகளை மீறாமல் கடைப்பிடிப்பாராயின் விபத்துகளை பெருமளவில் குறைக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கும் வகையில் கோவையில் 'police e eye' என்ற ஆண்ட்ராய்ட் ஆப் தனியார் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆப்-ஐ துவக்கி வைத்த கோவை போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறுகையில்,``இந்த ஆப் மூலம் போக்குவரத்து விதி மீறல்களை மக்கள் எங்கு பார்த்தாலும் உடனடியாக  போலீஸுக்கு தகவல் தெரிவிக்க முடியும். ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்பவர்கள், போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டுபவர்கள்… என எங்கு போக்குவரத்து விதி மீறல்கள் நடந்தாலும்  நீங்கள் சாலையில் இறங்கி அவரோடு சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக உங்கள் போனில் இருக்கும் இந்த ஆப் மூலம் போட்டோ எடுத்து அப்லோட் செய்தால் போதும். புகைப்படம் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் ஆப் மூலமே போலீஸுக்குத் தெரிந்துவிடும்.உடனடியாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான ரசீதும் அனுப்பி வைத்துவிடுவோம். கோவை மாநகரில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தற்போது 13 சதவிகிதம் சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது. இறப்பு சதவிகிதம் 42 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கோவை மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு உதவி ஆணையர் ராஜ்கண்ணண், ``கடந்த மூன்று மாதங்களாகச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த ஆப் மூலம் 1200-க்கும் மேற்பட்டவர்களுக்கு, விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ரூ.8 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க