வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (08/01/2019)

கடைசி தொடர்பு:18:05 (08/01/2019)

தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் வேட்டையாடியவர்கள் சிக்கினர்!

ராமநாதபுரம் மாவட்டம், தேர்தங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 4 பேரை வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் ரோந்துப் பணியின்போது பிடித்தனர்.

பறவைகள் சரணாலயம் அருகே வேட்டையாடலில் ஈடுபட்டவர்கள் கைது.
 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தங்கல், மேல செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரைக்கோட்டை உள்ளிட்ட 5 இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது. பருவ காலங்களின்போது பல வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் இங்கு தங்கிச் செல்கின்றன. இவற்றுடன் நம் நாட்டு பறவைகளும் இங்கு வாழ்ந்து வருகின்றன. இங்குள்ள பறவைகள் வேட்டையாடப்படுவதிலிருந்து தடுக்கும் பணிகளில் வனத்துறையின் வன உயிரின பாதுகாப்புப் பிரிவின் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ், தலைமையில் வனவர் மதிவாணன், வனக்காப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கொழுவூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த 4 பேர் சிக்கினர். தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டிச்சாமி, கோட்டை, புல்லாணி,  முருகன் ஆகியோர் கொக்குகளை வேட்டையாடியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட 5 உன்னி கொக்குகள், ஒரு குருட்டு கொக்கு ஆகியன உயிருடன் மீட்கப்பட்டது. மேலும், வேட்டையாடும் கருவிகள் மற்றும் 2 டூ வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அட்டவணை 4-ன் கீழ் உள்ள பறவைகளை வேட்டையாடிய 4 பேருக்கும் தலா  5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.