`வாழ்ந்தால் இப்படி வாழணும்’ - சி.பி.ஐ-யை மிரள வைத்த சென்னை மத்திய அரசு அதிகாரி  | Chennai central government staff caught in CBI

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (08/01/2019)

கடைசி தொடர்பு:17:26 (08/01/2019)

`வாழ்ந்தால் இப்படி வாழணும்’ - சி.பி.ஐ-யை மிரள வைத்த சென்னை மத்திய அரசு அதிகாரி 

அதிகாரி மீது பதிவான சிபிஐ எப்ஐஆர்

ஹைதராபாத்தில் உதவி இன்ஜினீயராகச் சேர்ந்த சம்பத், துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். அவரின் சொத்துகளைப் பார்த்து சி.பி.ஐ அதிகாரிகள் மிரண்டுபோய் உள்ளனர். 

 யார் இந்த சம்பத்? 

சென்னை திருவான்மியூர், திருவள்ளுவர் நகரில் குடியிருப்பவர் சம்பத் (62). இவர், பெசன்ட் நகர், ராஜாஜிபவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், சி.பி.ஐ சம்பத் மற்றும் அவரின் மனைவி சுகுணா ஆகியோரின் சொத்துகளை கணக்கெடுக்கத் தொடங்கினர். அப்போது அவர், 3.12.2012-ம் ஆண்டு முதல் 10.3.2017-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. சம்பத், கடந்த 1979-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உதவி இன்ஜினீயராகப் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பல மாநிலங்களில் பணியாற்றிவிட்டு சென்னை ராஜாஜி பவனில் பணியாற்றினார். 

இதையடுத்து, சம்பத் மற்றும் அவரின் மனைவி சுகுணா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சம்பத் மற்றும் அவரின் மனைவி சுகுணாவின் சொத்துப்பட்டியல்களைக் கடந்த 5 ஆண்டுகளாகச் சேகரித்த பிறகுதான் வழக்கு பதிவு செய்துள்ளது. 

 அதிகாரி மீது பதிவான சிபிஐ எப்ஐஆர்

சம்பத் மற்றும் சுகுணா மீது பதிவான எப்.ஐ.ஆர் குறித்து சி.பி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 3.12.2012-ம் ஆண்டிலிருந்து 10.3.2017-ம் ஆண்டு வரை உள்ள காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேர்த்துள்ளார். அதுதொடர்பாக எங்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் நாங்கள் சம்பத், சுகுணா ஆகியோரின் கடந்த 5 ஆண்டுகள் சொத்து விவரங்களைச் சேகரித்தோம். அதில் சில தகவல்கள் கணக்கில் வராமல் இருந்தது. அந்த விவரங்களை எல்லாம் சேகரித்துள்ளோம். ஆந்திரா, புனே, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் வீடுகள், விவசாய நிலங்கள், காலி இடங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால்தான் சம்பத் மீதும், அவரின் மனைவி சுகுணா மீதும் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்'' என்றனர். 
 
 ஃஎப்.ஐ.ஆரில் உள்ள தகவல்கள் 

3.12.2012-ல் சி.பி.ஐ கணக்கெடுத்தபோது 99,93,699.60 ரூபாய் மதிப்புள்ள சொத்து மதிப்பு இருப்பது தெரியவந்தது. 10.3.2017ல் 3,82,62,881.76 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்தன. 3.12.2012-ம் ஆண்டு முதல் 10.3.2017-ம் ஆண்டு வரை வருமானமாக 1,92,35,430.00 ரூபாய் கிடைத்துள்ளது. செலவினமாக 58,94,459.00 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனால் வருமானத்துக்கு அதிகமாக 77 சதவிகிதம் சொத்துகள் சம்பத், சுகுணா ஆகியோரின் பெயரில் இருப்பது தெரியவந்தது. 

சொத்துவிவரப் பட்டியலில் 5 வங்கிகளில் லட்சக்கணக்கில் ரூபாய் உள்ளதாகவும் ஆந்திரா, ஹைதராபாத், புனே, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் வீடுகள், சொத்துகள், விளைநிலங்கள் உள்ளன. 775.77 கிராம் தங்கமும் உள்ளன. அதுதொடர்பாக சம்பத், சுகுணா ஆகியோரிடம் விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.