வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (08/01/2019)

கடைசி தொடர்பு:18:50 (08/01/2019)

`உயிர்காக்கும் மருந்துகள் ஆன்லைனில் வர்த்தகம் கூடாது!’ - சேலத்தில் மருந்து வணிகர்கள் போராட்டம்

ஆன்லைன் மருந்து வர்த்தகம் கண்டித்து போராட்டம்.

``இன்று அனைத்தும் ஆன்லைன் வர்த்தகமாக மாறிய நிலையில் உயிர் காக்கும் மருந்து மாத்திரைகளும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு வந்திருக்கிறது. இது மக்களின் உயிருக்கு ஆபத்தாக அமைவதோடு இத்தொழிலை நம்பி வாழும் நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுவோம். அதனால் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகள் விற்பதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்'' என்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே சேலம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி சேலம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணன், ``அறிவியல் வளர்ச்சியால் பல நன்மைகள் இருந்தாலும் பல தீமைகளும் இருப்பதை மக்கள் உணர வேண்டும். மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் இன்று ஆன்லைன் வர்த்தகமாக மாறி இருக்கிறது. இதில் உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளும் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகள் வாங்குவது உயிருக்கு உத்தரவாதமில்லை. சக்கரை நோயாளிகள் பயன்படுத்து இன்சுலீன், ஆபரேஷன் தியேட்டரில் பயன்படுத்தும் மயக்க மருந்துகள், இதய நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகள் 2 டிகிரி முதல் 8 டிகிரி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொடுக்க வேண்டும். ஆன்லைன் விற்பனை மூலம் இது எப்படிச் சாத்தியமாகும்.

இந்த மருந்துகளின் சீதோஷன நிலை மாறினால் உயிருக்கு ஆபத்தாக மாறும். அதனால் மருந்து, மாத்திரைகள் ஆன்லைன் மூலம் வாங்கினால் உயிருக்கு ஆபத்தானது. அதுமட்டுமல்லாமல் இந்தத் தொழிலை நம்பி மருந்துக் கடைகளை வைத்திருக்கும் எங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சம் மருந்துக் கடைகள் இருக்கின்றன. இதில் 60 லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.

சட்ட விரோதமாக உயிர்காக்கும் மருந்து, மாத்திரை ஆன்லைன் வணிகம் செய்வதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய அடுத்தகட்ட போராட்டமாக இந்தியா முழுவதும் 3 நாள்கள் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க