வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (08/01/2019)

கடைசி தொடர்பு:19:15 (08/01/2019)

`தமிழக அரசுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கு!'- ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து வாஞ்சிநாதன் பேட்டி

``ஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழக அரசுக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது'' என்று மதுரையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட்  குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் வாஞ்சிநாதன்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ``ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தீர்ப்பு தமிழக அரசுக்கு கடுமையான தோல்வி. அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் பலவீனமான அரசாணையைக் கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு வழக்கு நடத்தியது. மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இதற்குத் தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். 15 உயிர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி உயிரை விட்டுள்ளன. தமிழக மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதுபோல் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது. இனி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படாது. ஜல்லிக்கட்டு சமயத்தில் கொள்கை முடிவு எடுத்ததைப் போல் ஸ்டெர்லைட் விஷயத்திலும் எடுக்க வேண்டும்.

வாஞ்சிநாதன்

ஸ்டெர்லைட் விஷயத்தின் மிகப்பெரும் பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் தொடர் இயக்கம் நடத்தப்படும். தமிழக முதல்வருக்கு மேலும் ஒரு வழி இருக்கிறது. அதைத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தொடர்ச்சியாகச் சட்டம்- ஒழுங்கு அந்தப் பகுதியில் ஏற்படுகிறது. எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-யை பயன்படுத்தி ஆலையை மூடலாம். அனைவரும் களத்தில் இறங்கி மூன்று வாரக் காலத்துக்குள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்'' என்று கூறினார்.