வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (08/01/2019)

கடைசி தொடர்பு:12:07 (09/01/2019)

`அந்த வலி என் மகள் தொலைந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது!' - கண்கலங்கிய ஹரிணியின் தாய்

இன்று காலை முதல் அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ள ஒரு செய்தி காஞ்சிபுரத்தில் காணாமல் போன குழந்தை ஹரிணி மீண்டும் கிடைத்துவிட்டாள் என்பதுதான். சிறுமி கிடைத்தபிறகு கடப்பாக்கம் காவல்நிலையம் முழுவதும் கொண்டாட்டமாகியுள்ளது.

ஹரிணி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள மானமதி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்- காளியம்மாள் தம்பதி.  இவர்களுக்கு இரண்டு வயதுடைய ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஊர் ஊராக சென்று பொம்மைகள், வளையல்கள் உள்ளிட்ட ஃபேன்சி பொருள்களை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் இவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு அணைக்கட்டு பகுதிக்கு உள்ள காவல்நிலையத்துக்கு அருகில் தங்கியிருந்தபோது குழந்தை ஹரிணி காணாமல் போயுள்ளது. குழந்தை தொலைந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்று திருப்போரூரில் இருந்து  மீட்கப்பட்டுள்ளார்.

பெற்றோருடன் ஹரிணி

ஹரிணி மீண்டும் கிடைத்தது தொடர்பாக பேசிய அவரது தாய்,  ``எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல பேர் தங்களின் குழந்தைகளை தொலைத்துள்ளனர் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதன் வலி என் மகள் தொலைந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. உங்களைப் போல் பலர் குழந்தையைத் தொலைத்துள்ளனர். ஆனால், நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே அமர்ந்துள்ளீர்கள். இது நியாயமா என காவலர்கள்கூட எங்களிடம் கேட்டனர். ஆனால், நாங்கள் கடவுள் மீது பாரத்தை இறக்கிவிட்டு நம்பிக்கையுடன் இங்கேயே காத்திருந்தோம். நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. நான் பத்து மாதம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற குழந்தையைத் தொலைத்துவிட்டு எப்படி நிம்மதியாக இருக்க முடியும். 

காளியம்மாள்

என் மகள் கண்டிப்பாக என்னிடம் திரும்பி வருவாள் என்ற ஒரே எண்ணத்துடன் மட்டும் இங்கு அமர்ந்திருந்தோம். கடவுள் ஆசீர்வாதத்தால் நல்லபடியாக என் குழந்தை கிடைத்துவிட்டது. குழந்தை தொலைந்துவிட்டது என யாரும் வருந்தாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயம் உங்கள் குழந்தை கிடைக்கும். யானைக்கு பலம் தும்பிக்கை மனிதனுக்கு பலம் நம்பிக்கை எனக் கூறுவார்கள். அதை இன்றுதான் நான் உணர்ந்தேன்” எனக் கூறி கண்ணீர் வடித்தார் காளியம்மாள்.