வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (08/01/2019)

கடைசி தொடர்பு:20:10 (08/01/2019)

சாலையில் கவிந்த வேன்... சிதறிய வெடிபொருள்கள்... தப்பிய உயிர்கள்

நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் ஏற்றிச் சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் காயமடைந்தனர்.  

விபத்தில் சிதறிய வெடிபொருள்கள்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் இருந்து பாறைகளை உடைக்கப் பயன்படுத்தக்கூடிய ஜெலட்டின்கள் உள்ளிட்ட வெடிபொருள்களை ஏற்றிய வேன் குமரி மாவட்டம் வில்லுக்குறி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள நான்குவழிச் சாலையில் வந்தபோது பைக் ஒன்று திடீரென குறுக்கே புகுந்துள்ளது. அதனால் பதற்றம் அடைந்த ஓட்டுநர் வாகனத்தை வேகமாகத் திருப்பினார். 

ஆனாலும், பைக் மீது வேன் மோதியது. அதன் பின்னர், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து பள்ளத்தில் இருந்த மற்றொரு சாலையில் விழுந்தது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டிவந்த பரமசிவன் என்பவர் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தார். வேன் டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வெடிபொருள்கள் ஏற்றிய வேன் விபத்து

வேன் சாலையில் கவிழ்ந்ததால் அதில் இருந்த வெடிபொருள்கள். ஜெலட்டின் குச்சிகள் அனைத்தும் சாலையில் சிதறின. அதனால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியாக வாகனங்களை அனுமதிக்காததுடன், உடனடியாக சாலையில் சிதறிக் கிடந்த வெடி பொருள்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். 

இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு வழிச் சாலையின் அருகில் வெடி பொருள்கள் மற்றும் ஜெலட்டின்கள் சிதறிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.