வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (08/01/2019)

கடைசி தொடர்பு:20:45 (08/01/2019)

``மீண்டும் பனை ஓலைக்கே மாறலாமே!’’ - எவர் க்ரீன் டெக்னிக்கை தூசிதட்டிய மீன் வியாபாரி

தமிழக அரசு பிளாஸ்டிக்குகளுக்குத் தடை என்று அறிவித்ததை செயல்படுத்துவதில் பெரிய நிறுவனங்களைவிட சிறு வியாபாரிகள்தான் மிகுந்த முனைப்போடு இருக்கிறார்கள். பேராவூரணி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற மீன் வியாபாரி, தன் வாடிக்கையாளர்களுக்கு கேரிபேக்குகளுக்குப் பதிலாக, பனை ஓலையில் மீன்களைக் கட்டிக்கொடுத்து வியாபாரம் செய்யத்தொடங்கிவிட்டார். 

பிளாஸ்டிக்

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ``முன்பெல்லாம் மீன்களை பேக்கிங் செய்ய பனை ஓலைகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், காலப்போக்கில் கேரிபேக்குகள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, அனைவரும் கேரிபேக்குக்கு மாறிவிட்டார்கள். அதிலும், மீன்களை பேக்கிங் செய்ய இரண்டு கேரிபேக்குகளைப் பயன்படுத்துவோம். தற்போது தமிழக அரசு பிளாஸ்டிக்குகளுக்கு, குறிப்பாக கேரிபேக்குகளுக்கு தடை கொண்டுவந்ததால் மீண்டும் பனை ஓலைக்கே மாறலாமே என நினைத்தேன். நான் வியாபாரத்துக்காக மீன் வாங்கச் செல்லும்போதே கையோடு அரிவாளும் எடுத்துச் செல்வேன். மீன் வாங்கிவிட்டு திரும்ப வரும்வழியில் சிறிய பனை மரங்களில் ஓலைகளை வெட்டியெடுத்து வருவேன். அவற்றைக்கொண்டுதான் பேக்கிங் செய்து தருகிறேன். பனை மரத்திலிருந்து விழும் வித்துகள் மரத்தடியிலேயே சின்னச் சின்னச் செடிகளாக முளைத்துக் கிடக்கும். அவற்றிலிருந்துதான் வெட்டியெடுத்து வருகிறேன். தற்போதைக்கு இலவசமாகத்தான் கிடைக்கிறது. இந்த ஓலைகளுக்குத் தட்டுப்பாடு வராதவரை சிக்கலில்லை’’ என்றார்.

பிளாஸ்டிக்

இவரைப்போலவே, கறிக்கடைகளில், தாமரை இலை, வாழை இலையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மக்களும் துணிப்பை, வயர்க்கூடைகளை எடுத்துக்கொண்டு கடைகளுக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். பிளாஸ்டிக் பயன்பாடு, குறிப்பாக கேரிபேக்குகள் இடையில் வந்த இயற்கைக்குக் கேடான பழக்கம்தான். விழிப்பு உணர்வு பெருகினால் இந்தப் பழக்கம் விரைவிலேயே ஒழியக்கூடும். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ``நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பரவலாகி வருகிறது. அதேபோல பெரிய கார்ப்பரேட் நிறுவனத் தயாரிப்புகளில், தின்பண்டங்களில் இருக்கும் பிளாஸ்டிக் உறைகளும் தடைசெய்யப்பட்டால் இந்த மாற்றம் கூடுதல் பயனளிப்பதாக இருக்கும். இல்லையென்றால் சிறுவியாபாரிகளை மட்டுமே பெரிதும் பாதிக்கக்கூடியதாக இருக்கும்" என்றனர்.