ஆன்லைன் மருந்து விற்பனை கூடாது: மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் | Medical shop owners association staged protest at virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/01/2019)

கடைசி தொடர்பு:21:00 (08/01/2019)

ஆன்லைன் மருந்து விற்பனை கூடாது: மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக மருந்து விற்பனையாளர்கள் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டம்

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது. இதற்கு மத்திய அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த மருந்து விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து மருந்து விற்பனையாளர்கள் கூறும்போது, ``ஆன்லைன் மருந்து வர்த்தகத்தால் பெருமுதலாளிகள் தான் லாபம் அடைவார்கள். இதனால் மருந்து கடை வைத்துள்ள சிறுவணிகர்கள் உட்பட 8 லட்சம் பேருக்கு விற்பனையின்றி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், மெடிக்கல் கடைகளைப் பொறுத்தவரை மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் மட்டுமே விநியோகம் செய்யப்படும். ஆனால், ஆன்லைனில் அப்படி அல்ல. எந்த மருந்து வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு மருந்துக்குப் பதிலாக வேறு மருந்து விநியோகம் செய்யும் சூழல் ஏற்படும்.

இதனால் ஆன்லைன் வணிகத்தில் மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதுடன், மருந்து வாங்குபவர்களுக்கு உடல்நல பாதிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.