அரசுப் பணத்தில் பிரசாரம் செய்யும் அ.தி.மு.க! - பொங்கல் பரிசுத் திட்ட சலசலப்பு | ADMK uses Pongal prize scheme for campaigning,claims opposition parties

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (08/01/2019)

கடைசி தொடர்பு:21:20 (08/01/2019)

அரசுப் பணத்தில் பிரசாரம் செய்யும் அ.தி.மு.க! - பொங்கல் பரிசுத் திட்ட சலசலப்பு

வெள்ள நிவாரணப் பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டிய அ.தி.மு.க-வினர் தற்போது அரசு வழங்கும் பொங்கல் பரிசையும் விட்டு வைக்கவில்லை. உள்ளூர் ரேஷன் கடைகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள அ.தி.மு.க-வினரின் அட்ராசிட்டிகள் தூள் பறக்கின்றன.

பொங்கல் பரிசு

தமிழக அரசு, பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் கரும்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்குகிறது. நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால், அரசுப் பணத்தில் பிரசாரம் செய்யும் வேலையை அ.தி.மு.க-வினர் செய்து வருகிறார்கள். ரேஷன் கடைகளில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், வட்டச் செயலாளர் வரை புகைப்படத்துடன் பேனர் வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் பொங்கல் பரிசை அ.தி.மு.க-வினர் கொடுப்பது போன்ற தோற்றத்தைக் கிராமப் பகுதிகளில் ஏற்படுத்துவதாக தி.மு.க-வினர் புகார் வாசிக்கிறார்கள்.

பொங்கல் பரிசு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் ஒன்றாவது வார்டு ரேஷன் கடையில், இன்று காலை பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இங்கு, தன் ஆதரவாளர்களுடன் சென்றார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் நாகூர்கனி. பொதுமக்களை ஒழுங்குபடுத்துவது, தனக்கு வேண்டியவர்களுக்கு உடனடியாகப் பணம் வாங்கிக்கொடுப்பது போன்ற வேலைகளை அவர் செய்துகொண்டிருந்தார். இடையே, `வர்ற எலெக்சன்ல மறக்காம எங்களுக்கு ஓட்டுப் போட்டுருங்க’ என வாக்கு சேகரிக்கும் வேலையிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். `அரசாங்கம் கொடுக்குற பணத்தை இவங்களே கொடுக்குற மாதிரி சீன் போடுறாங்க’ எனப் பொதுமக்கள் இதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடியே பொருள்களை வாங்கிச் சென்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க