வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (08/01/2019)

கடைசி தொடர்பு:20:35 (08/01/2019)

சட்டவிரோதமாக கைமாறுகிறதா ரூ.300 கோடி சொத்து? - சிக்கலில் மெட்ராஸ் உர நிறுவனம்!

மெட்ராஸ் உர நிறுவனத்துக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்தை சட்டவிரோதமாக கைமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை உர நிறுவனம்

சென்னை மணலியில் மத்திய உரத்துறைக்குச் சொந்தமான மெட்ராஸ் உர நிறுவனம் (எம்.எப்.எல்) செயல்பட்டு வருகிறது. 1966-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், உரத் தயாரிப்பில் ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனமாகும். சுமார் 270 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்திருக்கும் இந்நிறுவனத்துக்குச் சொந்தமான 77 ஏக்கர் நிலத்தை, எந்த முறையான வழிமுறையையும் பின்பற்றாமல் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்குத் தாரை வார்க்க முற்படுவதாக தொழிற்சங்கவாதிகள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது. 

இது குறித்து பேசிய தொழிற்சங்கவாதிகள்,  ``எம்.எப்.எல்.க்குச் சொந்தமான 77 ஏக்கர் இடத்தின் இன்றைய மதிப்பு 300 கோடி ரூபாயைத் தாண்டும். எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதால், சரக்குப் பெட்டகங்களைச் சேமித்து வைப்பதற்காக இந்த இடத்தைக் கேட்டு தென்னக ரயில்வே உட்பட பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. கடும் கிராக்கியுள்ள இந்த இடத்தை, எந்தவிதமான ஓப்பன் டெண்டரும் இல்லாமல் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு தாரை வார்க்க எம்.எப்.எல். நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

1,000 கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதால், நிர்வாகத்தை நடத்த இடத்தை விற்பதாகக் கூறுகின்றனர். அப்படி விற்று வரும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்தாலும், முழுவதுமாக நிதிச் சிக்கலில் இருந்து மீண்டுவிட முடியாது. நாளைக்கே எம்.எப்.எல். நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு இடமில்லாமல் போய்விடும். இந்த இடத்தை வாடகைக்கு விட்டாலே போதும், மாதம் தோறும் நிர்வாகத்தை நடத்துவதற்கு தேவைப்படும் நிதியை திரட்டிவிடலாம். அல்லது, ஓப்பன் டெண்டர் மூலமாக விற்றால் பொது ஏலத்தில் 500 கோடிக்கும் மேல் விற்று லாபம் பார்க்கலாம். அப்படி எதுவும் செய்யாமல், ரகசிய உடன்படிக்கை போன்று சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு இடத்தை விற்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றனர்.

இதுகுறித்து விளக்கமறிய எம்.எப்.எல். நிர்வாகத்தினரை தொடர்புகொண்டோம். ``இடத்தை விற்பதற்கான நடவடிக்கை பரிசீலனை கட்டத்தில்தான் உள்ளது. சட்டவிரோதமாக எதுவும் நடைபெறவில்லை. ஓப்பன் டெண்டர் மூலமாகத் தான் எல்லாமே நடைபெறும்" என விளக்கமளித்தனர்.