வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (08/01/2019)

கடைசி தொடர்பு:21:13 (08/01/2019)

`பொருளாதாரரீதியிலான இட ஒதுக்கீடு ஊழலை அதிகப்படுத்தும்!’ - மக்களவையில் தம்பிதுரை பேச்சு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா மீதான விவாதத்தில் அ.தி.மு.க எம்.பி தம்பிதுர மத்திய அரசுக்கு எதிராக அதிரடியாகப் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.  

தம்பிதுரை

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு, பலதரப்பட்ட தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வந்தது. இந்நிலையில் இன்று இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. 

மக்களவை விவாதத்தில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மட்டுமே கலந்துகொண்டார். அ.தி.மு.க-வின் மற்ற எம்.பி-க்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விவாதத்தின்போது பேசிய தம்பிதுரை, ``இன்று அ.தி.மு.க சார்பாகப் பேச நான் ஒருவனே உள்ளேன். இடஒதுக்கீடு எதற்காக வழங்கப்படுகிறது? எங்கள் கட்சி சமூக நீதியை நம்புகிறது. நான் ஒரு சூத்திர இனத்தைச் சார்ந்தவன். சூத்திரராக சமூகத்தில் நாங்கள் பல இன்னல்களைச் சந்தித்தோம். இதற்காகத்தான் திராவிடக் கட்சிகள் இடஒதுக்கீடுக்காகப் போராடின. 

நாடாளுமன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஏற்கெனவே பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. பின் எதற்குத் தனியாக 10 சதவிகித இடஒதுக்கீடு? அப்படியென்றால், ஏற்கெனவே உள்ள திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையா என்ற கேள்வி எழுகிறது. சட்ட மேதை அம்பேத்கர் நன்றாகப் படித்தவர். ஆனாலும் அவர், சாதியின் காரணமாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார். அதன் காரணமாகவே நமது முன்னோர்கள், நாட்டின் அரசியலமைப்பைப் பொருளாதார அடிப்படையில் இல்லாமல் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு எழுதினர். 

அம்பேத்கர்

நீங்கள் வேண்டுமென்றால் இடஒதுக்கீட்டை 70 சதவிகிதமாக உயர்த்துங்கள். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இன்னமும் இங்கு தீண்டாமை இருக்கிறது. கிராமங்களில் இன்னும் இரட்டைக் குவளை முறை பழக்கத்தில் இருக்கிறது. சாதிகள் அழியும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும். 

தம்பிதுரை

இன்று ஏழையாக இருக்கும் ஒருவர் நாளை பணக்காரராக வசதிபடைத்தவராக மாறலாம். அதை எப்படிக் கணக்கெடுப்பீர்கள்? இந்தச் சட்டம் ஊழலை அதிகப்படுத்தும். மக்களில் சிலர் லஞ்சம் கொடுத்து தங்களை ஏழையாகக் காட்டி சலுகையைப் பெறும் வாய்ப்புகள் அதிகம்” என்றார்.