வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (09/01/2019)

கடைசி தொடர்பு:02:00 (09/01/2019)

"ஜெயலலிதாவின் திட்டங்களை மூடியதற்கு இது பரிகாரமா?" - அ.தி.மு.கவை சாடும் பாலகிருஷ்ணன்

"ஜெயலலிதா அறிவித்த நல திட்டங்களை ஊத்தி மூடிவிட்டு அதற்கு பரிகாரமாக ரூ.1000 கொடுத்து மக்களுடைய கோபத்தை தணிக்கப் பார்கிறார்கள்" என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன்

 

கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், " உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற மசோதாவை நாடாளுமன்ற  கூட்டத்தின் கடைசி நாளில் கொண்டு வந்து இருப்பது  உண்மையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் நோக்கத்திற்காக  இல்லை. பா.ஜ.கவின் தோல்வி நிச்சியமாகி விட்டதால் இந்த மசோதவை  கொண்டு வந்துள்ளார்கள். அரசியல் காரணத்திற்காகவும்,  தேர்தல் நோக்கத்திற்காகவும் பா.ஜ.க செய்த  சாகசம்  தான் இந்த மசோதா.

நாடு முழுவதும் விவாதம் நடத்தாமல் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த பொருளாதார ரீதியான  இட ஒதுக்கீடு  உச்சநீதிமன்றம் சென்றால் நிற்காது. வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு கொடுப்பது அவசியம்தான், இதனை வேண்டாம் என கூறவில்லை. ஆனால், அவசர கதியில் இந்த மசோதாவை கொண்டு வந்திருப்பதால் அது எதிர்விளைவுகள் ஏற்படுத்தும். எல்லா விதத்திலும்  தோல்வி  அடைந்த மோடி அரசு, இந்த  இட ஒதுக்கீட்டு மசோதா மூலம் சாகசம் செய்து வெற்றி பெறலாம் என்ற  கனவு பலிக்காது.

ஏப்ரல் வரை எந்த தேர்தலும் நடத்தக் கூடாது என டிசம்பர், 3-ம் தேதியே கடிதம் எழுதி இருப்பது, அ.தி.மு.க எந்த தேர்தலையும் சந்திக்க  திராணியற்று  இருப்பதை காட்டுகிறது. தேர்தல் வந்தால் அ.தி.மு.க-வும் அதன் கூட்டணியான பா.ஜ.கவும் தோற்பது நிச்சயம்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பையே அந்த மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. பி.ஜே.பி ஆளும் மாநிலத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்தால் அந்த தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்க முடியுமா. சபரிமலை விவகாரத்தில் மதத்தை  வைத்து பிரச்னையை தூண்டவும்,  ஓட்டுகளை பெறவும் பி.ஜே.பி நினைக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. சட்ட மன்ற கூட்டத்திலேயே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட   கொள்கை முடிவு எடுத்து, அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.பாம்புக்கு தலையும்,மீனுக்கு வாலையும் காட்டுவது போல தமிழக அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்து கொள்கிறது.

சட்டமன்றத்தில்  ஆளுநரின் செயலாளர் நடந்து கொண்டது  மரபு இல்லை.  சபாநாயகர் அவையின் உரிமையை பாதுகாத்திருக்க வேண்டும். ஆளுநர் விவகாரத்தில் மாநில அரசு உணர்வற்ற நிலையில் இருக்கிறது. ஜெயலலிதா அறிவித்த நல திட்டங்களை ஊத்தி மூடிவிட்டு அதற்கு பரிகாரமாக  ரூ.1000 கொடுத்து மக்களுடைய கோபத்தை தணிக்கப் பார்கிறார்கள் என்றார்.