வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (09/01/2019)

கடைசி தொடர்பு:07:45 (09/01/2019)

விகடன் செய்தி எதிரொலி - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய இளைஞர்கள்!

‘புயல் வந்ததுல ஊரே அழிஞ்சிடுச்சு; அதிகாரிங்க வந்தாதானே எங்க கஷ்டம் தெரியும்’- விளாசும் அய்யம்மாள் பாட்டி எனும் தலைப்பில் கஜா புயல் தாக்கிய பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணி உள்ளிட்ட பகுதிகள் குறித்த பாதிப்புகள்குறித்து கஜா புயல் பாதித்த சில தினங்களில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

விகடன்

அதைத் தொடர்ந்து, காலி குடங்களுடன் சாலையில் தண்ணீர் லாரிக்காக காத்துக்கிடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான கதிர்வேல், சுரேஷ், விஜயகுமார் ஆகியோர் நம்மைத் தொடர்புகொண்டனர். எங்கள் கிராமத்தில் பலருக்கும் பாதிப்புதான். சமுதாயக் கூடங்களில் தங்கியிருந்த நாங்கள், அவரவர் சுயமாக வீடுகளைச் சரிசெய்யத்  தொடங்கிவிட்டோம். ஆனால், சில குடும்பங்கள் குடியிருந்த குடிசைகள் கஜா புயலால் நாசமாகிப் போனதால், வழிதெரியாமல் நிற்கிறார்கள். சில வீடுகளை நாங்களே சில தன்னார்வலர்கள் உதவியுடன், தென்னங்கீற்றுக் கொட்டகை போட்டுக் கொடுத்துள்ளோம்.

இன்னும் மூன்று வீடுகள் உள்ளன. அவர்களுக்கும் கீற்றுக் கொட்டகை போட்டுக் கொடுக்க  முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் என்றவர்கள், எங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகள், மழையால் பாதிக்கப்பட்டன. அதேபோல, குழந்தைகளின் நோட்டு, புத்தகங்களும் நாசமாகிப்போனது அவர்களுக்கு உதவ முடியுமா எனக் கோரிக்கை வைத்தனர்.

அரசுப்பள்ளி

இந்நிலையில், நமது செய்தியைப் படித்த திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த இளைஞர்களான பரீஹ் அஸ்ரார், ஹைதர் அலி,அஸாருதீன் குழுவினர், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு மூலம் செய்தியில் குறிப்பிட்டிருந்த பகுதிகளுக்கு உதவ முன்வந்தார்கள். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூர், கல்லாலங்குடி,கோவில்பட்டி, ஜீவா நகர், கீழாத்தூர் சமத்துவபுரம், கந்தர்வகோட்டை அடுத்த ஒடுகம்பட்டி, உள்ளிட்ட 6 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 600 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு, நோட்டு, பேனா, பென்சில், எரேஸர், ஸ்கேல் உள்ளிட்டவை வழங்குவதாக உறுதியளித்தனர்.  அந்த வகையில் நேற்று, சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

உதவிகீழாத்தூரைச் சேர்ந்த மேனகா, “அன்னைக்குப் பெய்த மழையில் எங்க ஊரே அழிஞ்சிபோச்சு. எங்க வீட்டின் கூரை பக்கத்தில் உள்ள குளத்தில் போய் கிடந்தது.  வீட்டில் இருந்த பொருள் எல்லாம் மழையில் நாசமானதில்  என் நோட்டு புத்தகமெல்லாம் வீணாப்போச்சு. கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் கொட்டாய் போட்டிருக்கிறார்கள். அப்பா அம்மா நோட்டு வாங்கிக் கொடுத்திருந்தாலும், இன்னும் வேணும்னு கேட்க முடியல. இன்றைக்கு, விகடன் மூலமா உதவி கிடைச்சிருக்கு” என்றார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல தன்னார்வலர்கள் மிகவும் சிரமப்பட்டு உதவிகளைக் கொண்டு சென்று கொடுத்தார்கள். அதை  நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். ஆனால், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபயகரணங்கள் குறித்துக் கூறியதும், மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்க வழிசெய்த விகடனுக்கும், திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த இளைஞர்களான பரீஹ் அஸ்ரார், ஹைதர் அலி,அஸாருதீன் குழுவினருக்கும் நன்றிகள் என்றார் கீழாத்தூரைச் சேர்ந்த சுரேஷ். மாணவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியுடன்  பொங்கல் நல்வாழ்த்துகள் சொன்னார்கள் கோரஸாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க