‘இயற்கையோடு ஒரு புத்தக வாசிப்பு!’- திருச்சி திறந்தவெளி நூலகம் அசத்தல் | Trichy People Welcome Open Library

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (09/01/2019)

கடைசி தொடர்பு:10:45 (09/01/2019)

‘இயற்கையோடு ஒரு புத்தக வாசிப்பு!’- திருச்சி திறந்தவெளி நூலகம் அசத்தல்

இந்தியாவில் முதல்முறையாக, வெளிநாடுகளில் உள்ளதைப் போலவே, திருச்சியில்  தொடங்கப்பட்டுள்ள திறந்தவெளி நூலகத்துக்கு வரவேற்பு கூடியுள்ளது.

நூலகம்

என்னதான் டெக்னாலஜி வளர்ச்சி அதிகமானாலும், ஸ்மார்ட் போன் சகிதமாகவும், கணிணி வழியாக உலகில் உள்ள தகவல்களை சட்டென படித்துவிட முடிந்தாலும், புத்தகங்களை வாசிப்பதில் உள்ள அலாதி சந்தோஷம் எதிலும் இல்லை என்கிறார்கள், நூலக வாசகர்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக உலாவரும் நபர்கள், அறைகளில் உள்ள நூலகங்களுக்குச் செல்வதே இல்லை. அந்த வகையில், வெளிநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘லிட்டில் ப்ரீ லைப்ரரி’ எனப்படும் 'திறந்தவெளி  நூலகம்' திட்டத்தை திருச்சி மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.  அதற்கான முதற்கட்டப்பணியாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம்,  ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட புத்தூர் ஆபீசர்ஸ் காலனி பகுதியில் அமைத்துள்ளது. 

இதில், மழைக்காலத்தில் நூல்கள் நனைந்து சேதமடையாத வகையில், நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. நூலகத்தின் மையப் பகுதியில் இருக்கை வசதிகளும், சுற்றிலும் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அருகிலேயே ஸ்ரிட்கார்டன் எனப்படும் இருக்கைகளுடன்கூடிய வீதி பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளதால், இயற்கையோடு புத்தகங்களை வாசிக்க முடிகிறது.

திறந்தவெளி நூலகம்

 இந்தத் திறந்தவெளி நூலகத்தில், மாநகராட்சி சார்பில் 1000 நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.  நூல்கள் வைப்பதற்கான அடுக்குகளில் இருந்து யார் வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். ஆனால், 'கிவ் ஏ புக்... டேக் ஏ புக்' என்ற திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் தங்களிடம் உள்ள ஏதேனும் ஒரு நூலை இங்கு வைத்த பின்னர், புதிய நூலை எடுத்துச்செல்ல வேண்டும் என்கிறார்கள் நூலக நிர்வாகிகள்.

நூலகம் குறித்து மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், “சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தும் இளைஞர்கள் மத்தியிலும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில், இந்த திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நூலகம், மாநகர மக்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலேயே முன் மாதிரியாகத் திறந்தவெளி நூலகம் செயல்படுத்துகிறது.  பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இந்த நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்தித்கொள்ளலாம்.  24 மணி நேரமும் செயல்படும் வகையில் உள்ள நூலகத்தில், மாநகராட்சிப் பணியாளர் இருப்பர்.  மாணவ மாணவிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும், எப்போது வேண்டுமானாலும் நூலகம் வரலாம்.  புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச்செல்ல நினைக்கிறவர்கள், கண்டிப்பாக தங்களிடம் உள்ள பயனுள்ள நூலை இந்த திறந்தவெளி நூலகத்துக்கு வழங்க வேண்டும்” என்றார்.

'புத்தக வாசிப்பு, மனிதனை ஒருமுகப்படுத்துகிறது' என்று, திறந்தவெளி நூலகத்துக்கு காலை மாலை வாசகர்கள் படையெடுக்கத்  தொடங்கிவிட்டார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க