சபரிமலையை அடுத்து அகஸ்தியர் கூடம்! - தமிழ்முனியை குறிவைக்கும் பெண்கள் அமைப்பு! | Women Weren't Allowed To Go To agasthiya koodam Now They Can

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/01/2019)

கடைசி தொடர்பு:12:20 (09/01/2019)

சபரிமலையை அடுத்து அகஸ்தியர் கூடம்! - தமிழ்முனியை குறிவைக்கும் பெண்கள் அமைப்பு!

பரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்தாகிவிட்டது. இன்னும் பெண்கள் நுழைய முடியாத பகுதியில் அகஸ்திய முனி குடியிருக்கிறார். தமிழகப் பகுதியில் இருந்து அகஸ்தியர் கூடத்துக்குச் செல்ல அனுமதியில்லை. கேரள அரசின் அனுமதி வாங்கி திருவனந்தபுரத்திலிருந்து நெய்யாற்றின்கரை வனச்சரகத்தில் போனக்காடு வழியாகச் செல்ல முடியும்.

அகஸ்தியர் கூடத்தில் தமிழ்முனி சிலை

Photo Courtesy: Tenkasi Nature Club

ஆபத்தான செங்குத்தான பாறைகள் நிறைந்த ட்ரெக்கிங் பாதை. 25 கிலோ மீட்டர் தொலைவுகொண்டது. 6,500 அடி உயரம் ஏறி இறங்க மூன்று நாள்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதியிலிருந்து மார்ச் 2-ம் தேதி வரை 41 நாள்கள் அகஸ்தியர் கூடத்தில் மலை ஏற அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது.

யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அகஸ்தியர் கூடம் உள்ளது. அகஸ்தியர் கூடத்தில் மலை ஏற பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.  அகஸ்தியர் கூடத்தில் பெண்களை அனுமதிக்க கேரள உயர் நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கில், அகஸ்தியர் கூடத்துக்கு பெண்கள் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டது. பழங்குடியின கானி மக்களின் பாதுகாவலராக அகஸ்தியர் அறியப்படுகிறார். நீதிமன்றத்தின் உத்தரவு தங்கள் மனதைப் புண்படுத்தியுள்ளதாக,  இந்த சமூகத் தலைவர்களுள் ஒருவரான ராஜேந்திர கானி தெரிவித்துள்ளார்.

''அகஸ்திய முனி எங்கள் அரசர். எங்கள் மக்களின் மூத்த கானி. பிரம்மச்சாரியான அவரை வழிபட எங்கள் இன பெண்களைக்கூட அனுமதிக்க மாட்டோம். நாங்கள் வாழும் முறை முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால், மெத்தப் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், எங்களை... எங்கள் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ளவில்லை. எங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கின்றனர் என்பதே உண்மை'' என்கிறார். 

அகஸ்தியர் கூடம் செல்லும் வழி

அகஸ்தியர் மலை, அரிய வகை மூலிகைகள் நிறைந்தது. பல மூலிகை ஆராய்ச்சியாளர்கள் இங்கே ஆராய்ச்சி மேற்கொள்வது உண்டு.  2014-ம் ஆண்டு, ஆராய்ச்சியாளர் பூபதி சுப்ரமணியம், இரு மாணவிகளுடன் குறுமுனி சிலை அருகே ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ,கால் தடுக்கி மலையில் இருந்து விழுந்து இறந்துபோனார். குறுமுனி அருகே இளம்பெண்களுடன் சென்றதால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கானி மக்கள் கூறினர். 

அகஸ்தியர் கூட குறுமுனி சிலைக்கு, சிவராத்திரி சமயத்தில் கானி மக்கள் சிறப்பு பூஜைகள் நடத்துவார்கள். கேரள வனத்துறை,  சிவராத்திரிக்கு  முன்னதாக 41 நாள்கள் ட்ரெக்கிங் செல்ல அனுமதி அளித்துள்ளது.  ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு கானி மக்கள்தான் வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.

அகஸ்தியர் கூடம்

அகஸ்தியர் கூடத்துக்கு பெண்கள் செல்ல கானிக்கர் அறக்கட்டளையின் தலைவர் மோகன் திரிவேனியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''பெண்கள் அகஸ்தியர் கூடத்து வந்து சென்றால், நாங்கள் பரிகார பூஜை நடத்துவோம். அதேவேளையில், சங்பரிவார் அமைப்புகள் போல பெண்களைக் கட்டாயமாக வெளியேற்றவோ அல்லது போராட்டமோ நாங்கள் நடத்த மாட்டோம்'' என்று கூறுகிறார் மோகன் திரிவேனி. 

அகஸ்தியர் கூடத்துக்குச் செல்லும் வழியில், 6 கிலோ மீட்டருக்கு முன்னதாக அதிரிமலை என்ற இடம் உள்ளது. கானி இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இங்கு வரும் பெண்களை அனுமதிக்க கேரள வனத்துறை  முடிவுசெய்துள்ளது. கானி இனப் பெண்களும் இந்த மலையைத் தாண்டி செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க