அவர் பெயர் `20 ரூபாய்'... இவர் `சுயநலப்புலி'! - உச்சகட்டத்தில் ஸ்டாலின்- தினகரன் வார்த்தைப் போர்! | stalin ttv dinakaran slams each other

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (09/01/2019)

கடைசி தொடர்பு:12:50 (09/01/2019)

அவர் பெயர் `20 ரூபாய்'... இவர் `சுயநலப்புலி'! - உச்சகட்டத்தில் ஸ்டாலின்- தினகரன் வார்த்தைப் போர்!

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திருவாரூர் சட்டமன்றத் தொகுதி காலியானது. இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்  எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.  தொடர்ந்து, வேட்பாளர்களை அறிவிக்கும்  பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கின. இதனிடையே, கஜா புயல் நிவாரண உதவிகளைக் காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவிக்க, டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர், `திருவாரூர் இடைத்தேர்தலைக் கண்டு தி.மு.க பயப்படுகிறது. டி.ராஜாவை வைத்து வழக்கு போட வைக்கிறார்கள். நான் ஒரு சுயேச்சை, நானே தைரியமாக நிற்கிறேன். ஆனால் தி.மு.க-வுக்கு ஏன் பயம்’ என்று சாடியிருந்தார்.

டிடிவி தினகரன்

டி.டி.வி. தினகரனின் இதுபோன்ற பேச்சுகளை வழக்கமாகக் கடந்துசெல்லும் தி.மு.க, இம்முறை வார்த்தைப் போருக்குத் தயாராகியுள்ளது. இதுதொடர்பாக  சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``டி.டி.வி. தினகரன் மீது ஃபெரா, சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதைக்கண்டு அவர்தான் பயப்படவேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போதுகூட அவரை ஆர்.கே.நகர் மக்கள் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர், தி.மு.க தேர்தலுக்கு அஞ்சுகிறது எனக் கூறியது நகைப்புக்குரியது” என்று விமர்சித்தார்.

அதுமட்டுமின்றி, நேற்றைய முரசொலி இதழில் ``மானத்தைப் பற்றி கவலைப்படும் ஆயிரம் பேருடன் விவாதிக்கலாம். மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன்கூட விவாதிக்க முடியாது’ என்றார் பெரியார். இதில் டி.டி.வி.தினகரன் இரண்டாவது ரகம். கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன சில்லறைகளுக்கு சிகரங்களைப் பற்றி என்ன தெரியும்” என்று டி.டி.வி.தினகரனை தாக்கி தலையங்கம் வெளியிடப்பட்டது. 

ஸ்டாலின்

 

இதற்கு பதிலடி கொடுத்த தினகரன், ``கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றையை நிலையை ஆராய்ந்து பார். அவன் தியாகியா அல்லது தகுதியைத் தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம், பிள்ளைகள் என்று வந்துவிட்டால், அவன் சுயநலப்புலிதான் என்றார் பெரியார். திருவாரூரிலிருது திருட்டு ரயிலேறி, சென்னை வந்த பாரம்பர்யத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப்புலி, பல நூறுகோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினை பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் இப்படிச் சொன்னார்போலும்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.  இரண்டு தரப்பிலும் வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

தினகரன்

இதுகுறித்து அ.ம.மு.க-வினர், ``தேர்தல் நடந்தால் அது தி.மு.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின். ஆளும்கட்சியும், அ.ம.மு.க-வும் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு அதிகம். இந்த இடைத்தேர்தலை நடத்துவதில் ஸ்டாலினுக்கு துளிகூட விருப்பமில்லை.  ஆளும்கட்சியின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக, அ.தி.மு.க-வின் வாக்குகள், டி.டி.வி.தினகரனுக்கு விழும் வாய்ப்பும் உள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் டி.ராஜா மூலம்  வழக்குதொடர்ந்து, தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் ஸ்டாலின். இடைத்தேர்தல் நடந்திருந்தால், தி.மு.க-வுக்கு டஃப் கொடுத்திருப்போம். தன் செல்வாக்கை இடைத்தேர்தல்மூலம் நிரூபித்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமிட்டிருப்பார் தினகரன். இந்த வாய்ப்பு நழுவியதே, ஸ்டாலின் மீதான பாய்ச்சலுக்குக் காரணம்” என்கின்றனர்.

தி.மு.க தரப்பில், ``செந்தில்பாலாஜி கட்சியைவிட்டு போனது, அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தங்கள் இயலாமையை வெளிபடுத்தவே டி.டி.வி.தினகரன் இப்படி பேசிவருகிறார். இது தொடர்ந்தால், தி.மு.க தொடர்ந்து பதிலடிகொடுக்கும்” என்கிறார்கள்.