50,000 ரூபாய், பெட்ரோல் பங்க் சிசிடிவி காட்சிகள்... ஹரிணியை மீட்டக் கதையை விவரிக்கும் போலீஸ்! | How the baby Harini was kidnapped? The Police department narrates the story

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (09/01/2019)

கடைசி தொடர்பு:12:55 (09/01/2019)

50,000 ரூபாய், பெட்ரோல் பங்க் சிசிடிவி காட்சிகள்... ஹரிணியை மீட்டக் கதையை விவரிக்கும் போலீஸ்!

``காவல்துறையினருக்கே உரிய முறையில் சில ரகசிய முயற்சிகளை எடுத்தோம். சிறுமி கடத்தப்பட்ட இடம் அருகேயுள்ள 'பெட்ரோல் பங்க்'-ல் கிடைத்த சிசிடிவி பதிவில் இருவர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அவர்களுடன் குழந்தை இருப்பதாகப் பதிவாகவில்லை. அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டோம்.’’

50,000 ரூபாய், பெட்ரோல் பங்க் சிசிடிவி காட்சிகள்... ஹரிணியை மீட்டக் கதையை விவரிக்கும் போலீஸ்!

ரிணி கிடைத்த மகிழ்ச்சியில் அவளுடைய குடும்பம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தங்களின் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியை வெங்கடேசன் - காளியம்மாள் குடும்பமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர், நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இரண்டு வயது மகள் ஹரிணியுடன் 15.09.2018 அன்று பவுஞ்சூர் காவல்நிலையம் அருகே தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி ஹரிணி நள்ளிரவில் காணாமல்போனார். இந்த நிலையில் காஞ்சிபுரம் காவல்துறையினரால் ஹரிணி மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

ஹரிணி

ஹரிணி கிடைத்த தகவலைக் கேட்டு ஒட்டுமொத்த உறவினர்களும் செய்யூர் காவல்நிலையத்தில் குவிந்துவிட்டார்கள். ஹரிணி கையில் பணம் கொடுத்தும் பரிசுப் பொருள்கள் கொடுத்தும் மகிழ்ந்தனர். சிலர் ஹரிணியுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஹரிணிக்கு திண்பண்டங்கள் வாங்கிக்கொடுப்பது, பொம்மை வாங்கிக்கொடுப்பது என எல்லோரும் ஹரிணியை விடுவதாக இல்லை. இதனால் அன்று முழுவதும் ஹரிணி ரொம்ப பிஸி.

குடும்பத்துடன்...

``ஹரிணியைக் கண்டுபிடித்தது எப்படி?’’ எனக் காவல்துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். “அந்தச் சிறுமி காணாமல் போனதிலிருந்தே அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் தீவிரமாக இருந்தோம். சிறுமியைக் கடத்திச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் கிடைக்கவில்லை. இரண்டு மாதத்துக்கு முன்பு கொல்கத்தா அருகே துர்காபூரில் ஹரிணியைப் போன்ற சாயல் உடைய குழந்தை ஒன்று இருந்தது. இதனால் வெங்கடேசனை அழைத்துக்கொண்டு கொல்கத்தா சென்றோம். ஆனால், அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடம் அந்தக் குழந்தையை ஒப்படைத்துவிட்டுத் திரும்பினோம். பிறகு, கரூர் பகுதியைச் சேர்ந்த ‘இணைந்த கைகள்’ அமைப்பினரிடம் ‘எங்களிடம் ஹரிணி என்ற குழந்தை இருக்கிறது. ஒரு லட்சம் கொடுத்தால் கொடுக்கிறோம்’ என்று பொய்யானத் தகவலை அளித்து, பணம் பறிக்க முயன்றவரைக் கைது செய்தோம். இந்த வழக்கு தொடர்பாக மும்பைக்குச் செல்வதற்கான நடவடிக்கையையும் எடுத்து வந்தோம். ஆனால், அதற்குள் ஹரிணி இங்கேதான் இருக்கிறாள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. 

CCTV காட்சி

இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கே உரிய முறையில் சில ரகசிய முயற்சிகளை எடுத்தோம். சிறுமி கடத்தப்பட்ட இடம் அருகேயுள்ள 'பெட்ரோல் பங்க்'-ல் கிடைத்த சிசிடிவி பதிவில் இருவர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அவர்களுடன் குழந்தை இருப்பதாகப் பதிவாகவில்லை. அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டோம். அதன் பிறகு படத்தில் இருப்பவர் மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் என அடையாளம் தெரிந்தது. அதைத் தொடர்ந்து அவரின் நடமாட்டத்தைக் கண்காணித்தோம். அவரின் நண்பர் பிரகாஷையும் கண்காணித்தோம். பிரகாஷும் சங்கீதாவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்களை ரகசியமாகக் கண்காணித்தோம். பிரகாஷைப் பிடித்து உரிய முறையில் விசாரணை நடத்தினோம். அதில், திருப்போரூரில் அந்தச் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருப்போரூரில் உள்ள சங்கீதாவின் வீட்டிலிருந்த சிறுமியை மீட்டோம். அவளின் பெற்றோரை வரவழைத்து, அந்தக் குழந்தை ஹரிணிதான் என்பதை உறுதி செய்தோம். அதன் பிறகு அந்தக் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, சங்கீதாவைக் காவல் நிலையம் அழைந்து வந்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.

மீட்கப்பட்ட ஹரிணி

சங்கீதாவுக்குத் திருமணமாகி 8 வருஷமாகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. சங்கீதாவுக்கும் பிரகாஷ் (எ) வசந்தராஜ் என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. அதேபோல் சங்கீதாவின் தங்கைக்கு சுதாகர் என்பவருடன் திருமணம் ஆன நிலையில், அவரைப் பிரிந்து வாழ்கிறார். கணவருடன் ஏற்பட்ட பிரிவைத் தொடர்ந்து மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சங்கீதா ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று வீரபாண்டியனிடம் சொல்லி இருந்தாராம். அதன்படி சங்கீதாவிடம், ஒரு யோசனையைத் தெரிவித்து, நாடோடிகள் தங்கியிருந்த பகுதியில் கண்காணித்து வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்தான் ஹரிணியை அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, நள்ளிரவில் தூக்கிச் சென்றுள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோர்களோடு தங்கிய ஹரிணியை வீரபாண்டியும் அவரின் நண்பர் கார்த்தியும் கடத்திச் சென்றுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக ஹரிணியுடன் இருந்த படங்கள் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் தங்களைக் கண்டுபிடிக்க முடியாது என நினைத்திருந்தார்கள். ஹரிணியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சங்கீதாவிடம் பணத்தையும் அவர்கள் பெற்றுள்ளனர் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து போலீஸார், சங்கீதா மற்றும் பிரகாஷைக் கைது செய்துள்ளனர். கார்த்தி தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்