`யார் பணத்திலிருந்து 1,000 ரூபாய் கொடுக்குறீங்க?’ - பொங்கல் பரிசுக்கு முட்டுக்கட்டை போட்ட நீதிமன்றம் | Chennai high court bans TN government pongal gifts

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (09/01/2019)

கடைசி தொடர்பு:14:29 (09/01/2019)

`யார் பணத்திலிருந்து 1,000 ரூபாய் கொடுக்குறீங்க?’ - பொங்கல் பரிசுக்கு முட்டுக்கட்டை போட்ட நீதிமன்றம்

பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டேனியல்

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் தாக்கல் செய்த மனுவில், ``தமிழக அரசின் தற்போதைய வரி வருவாய் 1,12,616 கோடி ரூபாய். மொத்த கடன், 3,55,845 கோடி ரூபாய். இது தவிர, பல்வேறு திட்டங்களுக்கு 43,962 கோடி ரூபாய் கடன் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால், பொங்கல் பரிசு வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், தகுதியான மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், அரசு உதவி பெறுபவர்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு இருக்க வேண்டும். கஜா புயல் பாதிப்பிலிருந்து பல மாவட்டங்கள் மீளாத நிலையில், அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக் கூடாது’’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

நீதிமன்றம்

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ``அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ 1,000 ஏன்? வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் என்றால் கொடுக்கலாம். யாருடைய பணத்திலிருந்து ரூ.1,000 வழங்கப்படுகிறது.

கட்சியின் பணம் என்றால் யாரும் கேட்கப்போவதில்லை. அதுவே, அரசு நிதி என்றால் கேள்வி எழத்தான் செய்யும். நீதிபதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் என ஏன் எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும்? வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாதா?

பணமாகக் கொடுபதற்குப் பதிலாக நல்ல சாலை, அடிப்படை வசதிகள், மருத்துவம் ஆகியவற்றைக் கொடுங்கள். கொள்கை முடிவு என்றால் யாரும் கேட்க முடியாது என அர்த்தமா? பொங்கல் பொருள்கள் மட்டுமே இதுவரை கொடுத்த நிலையில், இப்போது ஏன் ரொக்கமும் சேர்க்கப்படுகிறது? தேர்தல் அறிக்கையிலும் அப்படி ஏதும் அறிவித்ததாக இல்லையே’’ என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, அரசு தலைமை வக்கீல் விஜய்நாராயணன், ``கொள்கை முடிவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அரசு நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது. அட்டைதாரர்கள் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் தொகையைப் பெற முடியும். 5 வகையான அட்டைதாரகள் உள்ளனர்" என்றார்.

இதையடுத்து, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு ரூ.1,000 வழங்கத் தடை விதித்த நீதிமன்றம், இதில் அரசு கூட்டுறவுத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.