வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (09/01/2019)

கடைசி தொடர்பு:15:16 (09/01/2019)

`1000 ரூபாயால் 2 நாள் தான் மகிழ்ச்சி... ஆனால்?' - வழக்கு தொடர்ந்த டேனியல் ஆதங்கம்

லவசங்களில் காட்டும் கொள்கை முடிவை, கடனைக் குறைப்பதிலும் அரசாங்கம் காட்ட வேண்டும் என்று பொங்கல் பரிசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோவை சமூக ஆர்வலர் டேனியல் யேசுதாஸ் கூறுகிறார். 

சென்னை உயர் நீதிமன்றம்

வறுமைக்கோட்டுக்குகீழ் இருப்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்குப் பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்த கோவை சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸிடம் பேசினோம்.

``அரசின் கொள்கை முடிவை நாங்கள் முழுவதுமாக எதிர்க்கவில்லை. கடந்த 2007-ம் ஆண்டு ரூ.17,000 கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் தொகை, தற்போது மூன்றரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இலவச திட்டங்கள் அதிகரிப்பால், தமிழக அரசின் கடன் சுமையும் அதிகரித்துவிட்டது. 

டேனியல் ஜேசுதாஸ்

இந்தச் சூழ்நிலையில், தற்போது பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது என்பது மக்களின் மீதுதான் கடன் சுமையை அதிகப்படுத்தும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்குப் பணம் வழங்குவதில் தவறில்லை. ஆனால், பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், அரசியல்வாதிகள் என்று அனைவருக்கும் ரூ.1,000 வழங்குவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இவர்களில் பலர், ரேஷன் கடையில் வரிசையில் நின்றெல்லாம் அந்த ஆயிரம் ரூபாயை வாங்கமாட்டார்கள். அதில் பிரயோஜனமும் இல்லை என்பதால்தான், அதற்கு மட்டும் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தோம்.

தலைமைச் செயலகம்

குறிப்பாக, தற்போது கஜா புயலால் டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, தமிழக அரசு கோரிய தொகையை வழங்கவில்லை. அவர்கள் தருவதாக சொன்ன தொகையையும் முழுமையாகத் தரவில்லை. அப்படியிருக்கும்போது, மக்கள் தலையில் மேலும் கடன் சுமையை அதிகரிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி

அரசாங்கம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால், மக்கள் இரண்டு நாள்களுக்குத்தான் சந்தோஷமாக இருப்பார்கள். நாங்கள், மக்கள் எப்போதுமே நிம்மதியாக இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறோம். எனவே, இதுபோன்ற இலவசங்களில் எடுக்கும் கொள்கை முடிவுகளை, கடனைக் குறைப்பதிலும் அரசாங்கம் எடுக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.