`டிஜிட்டல் பாஸ்போர்ட்டால் 3 டன் பேப்பர்கள் மிச்சம்!’ - மதுரை மண்டல அதிகாரி தகவல் | Madurai official about digital passport method

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (09/01/2019)

கடைசி தொடர்பு:16:40 (09/01/2019)

`டிஜிட்டல் பாஸ்போர்ட்டால் 3 டன் பேப்பர்கள் மிச்சம்!’ - மதுரை மண்டல அதிகாரி தகவல்

``எம்.பாஸ்போர்ட் எனும் டிஜிட்டல் முறையால் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 3 டன் பேப்பர்கள் மிச்சமடைந்துள்ளது'' என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல் அளித்தார்.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண் பிரசாத்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண் பிரசாத் செய்தியாளர் பேசுகையில், ``மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்ட மக்களுக்கு பாஸ்போர்ட் சேவையை வழங்கிவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 2.7 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸ்போர்ட் வழங்கும் முறை எளிமையாக்கப்பட்டது. அதனால் விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகமாகியுள்ளனர். 2017-ல் பாஸ்போர்ட் சேவை நெல்லை, மதுரை மாவட்டங்களில் மட்டும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை தபால் துறையுடன் இணைந்து நாடு முழுவதும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மதுரை மண்டலத்துக்குக் கீழ் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.

அருண் பிரசாத்

50 கிலோமீட்டருக்கு மேல் பயணப்பட தேவையில்லாத வகையில் நிறுவப்பட்டுள்ளது. எம்.பாஸ்போர்ட் ஆப் தொடங்கப்பட்டு பல முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. 2014-ல் போலீஸ் வெரிபிகேசன் 35 நாள்கள் ஆகும். 2017-ல் 18 நாள்களாகக் குறைந்தது. 2018-ம் ஆண்டில் எம்.பாஸ்போர்ட் வந்ததற்குப் பிறகு, 6 நாள்களாகக் குறைந்து மிக எளிமையாகிவிட்டது. எம்.பாஸ்போர்ட் சேவையால் மதுரை மண்டலத்தில் மட்டும் 3 டன் பேப்பர் மிச்சம் செய்துள்ளோம். பாஸ்போர்ட் தொடர்பாக மாணவர்ககுக்கு விழிப்புஉணர்வு வழங்கப்பட்டது. இதனால் 2,500 மாணவர்களுக்கு மேல் பயன்பெற்றனர். பாஸ்போர்ட் அலுவலகங்களில் தற்போது போலி ஆவணங்கள் கொண்டுவரும் முறை குறைந்துள்ளது'' என்றார்.