வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (09/01/2019)

கடைசி தொடர்பு:16:15 (09/01/2019)

`மத்திய அரசுக்கு அடிபணியமாட்டோம்!' - அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசம்

``அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும்'' என தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடம்பூர் ராஜூ 

சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று விருதுநகர் வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் கூறும்போது, ``பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்தார். இந்த நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள உயர் சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு முறையால் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்துள்ளோம். மத்திய அரசுக்கு அடிபணியமாட்டோம். எனவே, நாடாளுமன்றத்திலிருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அரசால் கொள்கை முடிவு எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் முடிவு தெரிந்த பிறகே அடுத்த நடவடிக்கையை எடுக்க முடியும். சம்பிரதாயத்துக்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கவில்லை. விசாரணையின் முழு அறிக்கை வந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 6 மாத குழந்தையாக இருந்தபோதே திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க யாரைப் பார்த்தும் பயப்படாது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்பட உள்ள புதிய திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையாக அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு ரூ.50,000-மும் இரண்டாவது முறை அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக அதிக கட்டணம் வசூல் செய்யும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

செய்தியாளர்களிடம் பேசும் கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே மீண்டும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். யார் யாரை மீண்டும் இணைப்பது என்பது குறித்து ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தான் முடிவெடுப்பார்கள்'' என தெரிவித்தார்.