வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (09/01/2019)

கடைசி தொடர்பு:18:11 (09/01/2019)

கிரிஜா வைத்தியநாதன் பெயரைச் சொல்லி பண மோசடி... விசாரணையில் திருப்பூர் போலீஸார்!

``அடிக்கடி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பேசுவதாகச் சொல்லி, அவர்களிடம் யாரையோ பேசவைத்து நம்பவும் வைத்திருக்கிறார்கள் சாய் அருணும், கார்த்திகேயனும். அதுபோக, மேலும் சில உயரதிகாரிகளின் பெயர்களையும் தங்களின் ஏமாற்று வேலைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.''

கிரிஜா வைத்தியநாதன் பெயரைச் சொல்லி பண மோசடி... விசாரணையில் திருப்பூர் போலீஸார்!

மிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பெயரைச் சொல்லி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாகத் திருப்பூரைச் சேர்ந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

திருப்பூர் வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். தனியார் பின்னலாடை நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் இவர், நேற்று திருப்பூர் காவல் நிலையத்தில் ஒரு மோசடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். ``கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் வசித்துவந்த சாய் அருண் என்பவரும், சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் சேர்ந்து எனக்கும் என் நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பல லட்சம் ரூபாயைப் பெற்றார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பெயரைச் சொல்லியும் எங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிவிட்டார்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பண மோசடி

புகார் தொடர்பாகக் காவல் நிலைய வட்டாரத்தில் விசாரித்தோம். ``சில மாதங்களுக்கு முன்னர் சாய் அருண் என்பவர் ராஜேஸ்வரனுடன் அறிமுகமாகியிருக்கிறார். அத்துடன் அவரது நண்பரான கார்த்திகேயன் என்பவரையும் ராஜேஸ்வரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். சென்னையில் வசிக்கும் கார்த்திகேயன், தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அவருக்குக் குறிப்பிட்ட சில லட்சம் ரூபாய் கொடுத்தால், அரசு வேலைகளை எளிதாக வாங்கித் தருவார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்து ராஜேஸ்வரன் தன்னுடன் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய சம்பத்குமார், உதயகுமார், பழனிவேல், மகேந்திரன், இசக்கிதுரை உள்ளிட்ட நண்பர்களிடமும், பின்னர் அவர்கள் மூலமாக மேலும் சில நபர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார். அந்த நபர்களும் ராஜேஸ்வரன், சாய் அருண் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தங்களுக்கு அரசு வேலையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கைக்கு வந்துள்ளனர்.

இதைப் பயன்படுத்திக்கொண்ட சாய் அருணும் கார்த்திகேயனும் அந்த ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட சில லட்சம் ரூபாயைச் சொல்லி, அந்தத் தொகையை ராஜேஸ்வரனின் வங்கிக் கணக்கில் போடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் சுமார் 8 லட்சம், 6 லட்சம், 5 லட்சம் எனத் தனித்தனியே ராஜேஸ்வரனின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். பணம் மொத்தமும் ராஜேஸ்வரனின் வங்கிக் கணக்கில் சேர்ந்ததும், அவருடைய வங்கி ஏ.டி.எம் அட்டையைச் சாய் அருணும் கார்த்திகேயனும் பெற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தி அக்கவுன்ட்டில் இருந்த பணத்தை முழுவதுமாக  எடுத்துக்கொண்டதாக ராஜேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் யாருக்கும் அரசு வேலையை வாங்கித் தரவில்லை.

மோசடியில் ஈடுபட்டவர்

மேலும் அடிக்கடி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பேசுவதாகச் சொல்லி, அவர்களிடம் யாரையோ பேசவைத்து நம்பவும் வைத்திருக்கிறார்கள் சாய் அருணும் கார்த்திகேயனும். அதுபோக, மேலும் சில உயரதிகாரிகளின் பெயர்களையும் தங்களின் ஏமாற்று வேலைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அரசு வேலையைப் பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டே வந்ததால், பணம் கொடுத்தவர்களுக்குச் சந்தேகம் அதிகரித்திருக்கிறது. பின்னர், ராஜேஷ்வரன் மூலம் சாய் அருண் மற்றும் கார்த்திகேயனை செல்போனில் தொடர்புகொண்டபோது, அவர்கள் அழைப்பை ஏற்காமல் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறார்கள். பின்னர் நேரடியாகச் சென்னைக்கே சென்று அவர்களது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில், சாய் அருண் மட்டும் இவர்களிடம் வசமாகச் சிக்கிக்கொண்டார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வந்து தற்போது திருப்பூர் காவல் துறையில் ஒப்படைத்திருக்கிறார்கள்" என்றனர்.

ராஜேஷ்வரன் உள்ளிட்ட சிலர் சென்னைக்குச் சென்று சாய் அருணை பிடித்துவந்து திருப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததோடு, ராஜேஸ்வரனே அந்த இருவர் மீதும் மோசடிப் புகாரை அளித்திருக்கிறார். ஆனால், பணத்தைக் கட்டி பாதிக்கப்பட்ட நபர்களில் 2 பேர் ராஜேஷ்வரன் மீதே குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். இதனால் காவல் துறையின் சந்தேகப் பார்வை ராஜேஸ்வரனின் மீதும் திரும்பியிருக்கிறது. 

புகார் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மனோகரனிடம் பேசினோம். ``புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். சாய் அருண் என்பவரைப் பிடித்துக்கொண்டு வந்திருக்கும் நிலையில், காவல் துறையில் புகார் அளித்த ராஜேஸ்வரனுக்கும்கூட இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர்களின் கூட்டாளியான கார்த்திகேயனையும் விரைவில் தேடிப் பிடிப்போம். தலைமைச் செயலர் உட்பட அரசு அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தியிருப்பதில் உண்மை இல்லை. புகார் குறித்த தொடர் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.

தமிழக தலைமைச் செயலரின் பெயரைச் சொல்லி மோசடி நடைபெற்றதால், காவல்துறை வட்டாரத்தில் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.


டிரெண்டிங் @ விகடன்