`நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும்!' - தமிழக அரசுக்கு ஹைகோர்ட்டு எச்சரிக்கை | Madras HC condemn TN government

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (09/01/2019)

கடைசி தொடர்பு:17:35 (09/01/2019)

`நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும்!' - தமிழக அரசுக்கு ஹைகோர்ட்டு எச்சரிக்கை

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை கையாளும் மாநில அரசின் போக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐகோர்ட்


சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஓராண்டு காலத்துக்கு நியமித்து உத்தரவிட்டிருந்தது. அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தனக்கு அலுவலகம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கிண்டியில் உள்ள அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாகவும், அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் இருப்பதாகவும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கடந்த விசாரணையின்போது புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டதையடுத்து சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் இன்று மனுவாக தாக்கல் செய்தார்.  

பொன் மாணிக்கவேல்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை என பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  ``விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய தனக்கு அவகாசம் வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தைப் பூட்டி சாவியை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரிடம் சிறப்பு அதிகாரி ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்தார்.  கடந்த 6 ஆண்டுகளாக சென்னை அலுவலகத்தில் தான் பணியாற்றி வந்ததாகவும், ஓய்வு பெற்ற பிறகு தன்னை சந்தித்த ஆய்வாளர் கேட்டுக்கொண்டதால் சாவியை ஒப்படைத்ததாகவும் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  ``சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளை,  தங்கள் பிரிவுக்கு திரும்பும்படி சிறப்பு அதிகாரி அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டார்.  ஓய்வு பெற்ற டி.ஜி.பி-க்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, டி.ஜி.பி தற்போது பணி நீட்டிப்பில் இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை மாநில அரசு கையாளும் விதம் முறையாக இல்லை எனவும், தேவைப்பட்டால் இந்த வழக்கில் நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர். பின்னர் பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்பு உத்தரவிட்ட  நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.