வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/01/2019)

கடைசி தொடர்பு:20:20 (09/01/2019)

`கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதைக் கைவிடணும்'!- போராடிய மக்களை கைது செய்தது போலீஸ்

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியைத் தடை செய்ய வலியுறுத்தி நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்ட 55 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. ``எத்தனை பேரை கைது செய்தாலும் எங்களது எதிர்ப்பு தொடரும்'' என எச்சரித்துள்ளனர். 

                                                   போராட்டம் நடத்திய மக்கள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இக்குவாரியை தடை செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த 36 கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

                                              பாதுகாப்பில் நீரேற்றும் நிலையம்

இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும், தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்கு ராட்சத போர்வெல் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல இருக்கும் அரசின் முடிவைக் கைவிடக் கோரியும் திருமானூரில் அரியலூர் நகராட்சிக்கு குடிநீர் செல்லும், தலைமை நீரேற்றும் நிலையம் முன்பு கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நா.தனபால் உள்ளிட்ட 51 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

                                       குவாரிக்கு எதிராக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ``கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்துப் போராடிவருகிறோம். 8 மாவட்டங்களில் மக்களின் நீராதாரத்தைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினர் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதியும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக அரசு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்'' என எச்சரித்தனர்.