வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (09/01/2019)

கடைசி தொடர்பு:21:10 (09/01/2019)

``கார்கள் இருக்கிறது... நகைகள் எங்கே? - தீவிர விசாரணையில் 7 தனிப்படைகள்!"

நகை கொள்ளை

கோவையில், பிரபல நகைக்கடைக்குச் சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில்  கொள்ளையர்கள் பயன்படுத்திய இரண்டு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த, திங்கள் கிழமை கோவையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கேரளாவில் உள்ள அதன் மற்றொரு கிளையிலிருந்து 388 சவரன் தங்க நகைகள் கொண்டுவரப்பட்டது. கோவையை அடுத்த காக்காசாவடி பகுதியைக் கடந்து  நகைக்கடையின் கார் வந்துகொண்டிருந்தபோது, இரண்டு கார்களில் பின்தொடர்ந்து வந்த மர்ப நபர்கள், நகைக்கடையின் காரை சுற்றி வளைத்து, காருக்குள் இருந்த இருவரை இழுத்து தள்ளிவிட்டு காரோடு நகையைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை தீவிரமாக களமிறங்கியது. நேற்று கோவை மதுக்கரையை அடுத்த தென்றல் நகர் பகுதியில் நகைக்கடைக்குச் சொந்தமான கார் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில், கொள்ளையர்கள் பயன்படுத்திய மாருதி ஆல்டோ காரை மதுக்கரைக்கு அடுத்துள்ள வழுக்குப்பாறை பகுதியில் மதுக்கரை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இப்படி கார்களில் வந்து காரோடு நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு கார்களைவிட்டுச் செல்லும் டெக்னிக்கான கொள்ளையர்கள் யார் யார் என்று போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையெல்லாம் சோதனைக்குட்படுத்தும் முனைப்பில் இருக்கிறது காவல்துறை.

இந்தக் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க ஏற்கெனவே ஏ.டி.ஜி.பி முத்தரசு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது போலீஸ். இன்னும் சில நாள்களில்  கொள்ளையர்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற சவாலோடு விசாரித்து வருகிறது கோவை போலீஸ்.