வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (09/01/2019)

கடைசி தொடர்பு:21:30 (09/01/2019)

சம்பளம் தராததால் 13 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சமையல்காரர்! சினிமா பாணியில் பிடித்த போலீஸ்

சம்பளத்தை சரிவர தராததால் 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி, 40,000 ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்த சமையல்காரரை சினிமா படபாணியில் சென்னை போலீஸார் பிடித்தனர்.

கொள்ளை


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரின் வீட்டில் உள்ள லாக்கரில் அடகு நகைகள், புதிய நகைகளை வைத்திருப்பது வழக்கம். கடந்த 6-ம் தேதி லாக்கரில் நகைகள், பணத்தை வைத்துவிட்டு பூட்டிவிட்டுச் சென்றார். பிறகு 7-ம் தேதி பார்க்கும்போது லாக்கர் திறக்கப்பட்டு 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி, 40,000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் சந்தோஷ்குமார் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இணை கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பேர் சந்தோஷ்குமார் வீட்டுக்கு வந்து செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது. அவர்கள் குறித்து சந்தோஷ்குமாரிடம் விசாரித்தபோது அதில் ஒருவர், தன்னுடைய வீட்டில் சமையல் வேலை செய்த ஹன்ஸ்ராஜ் என்று கூறினார். 

இதையடுத்து, அவரை போலீஸார் தேடினர். அப்போது அவரின் செல்போன் சிக்னல் விழுப்புரத்தைக் காட்டியது. உடனடியாக போலீஸார் விழுப்புரத்துக்குச் செல்ல முடிவு செய்தனர். அப்போது அவரின் செல்போன் சிக்னல் ஆந்திரா நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையைக் காட்டியது. இதனால் கொள்ளையர்கள் ரயிலில் செல்வதை போலீஸார் உறுதி செய்தனர். அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முடியாது எனக் கருதிய போலீஸார் சிங்கம் படத்தில் வருவதைப்போல ரயில்வே போலீஸாருக்கு கொள்ளையர்களின் படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பினர். அதோடு இணை கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா, தன்னுடைய பேட்ச் மேட் போலீஸ் அதிகாரியான மத்திய ரயில்வே  கமாண்டர் குமாரின் உதவியை நாடினார். ரயிலில் செல்லும் கொள்ளையர்களைப் பிடிக்க ரயில்வே போலீஸார் களத்தில் இறங்கினர். 

கொள்ளை

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் மூட்டை முடிச்சுகளுடன் கொள்ளையர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை கீழே இறக்கினர். காட்பாடியில் வைத்து கொள்ளையர்களை சென்னை போலீஸாரிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் சமையல்காரர் ஹன்ஸ்ராஜ், அவரின் சகோதரர் ஹிரேந்திர சிங் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். 

சென்னைக்கு அழைத்துவரப்பட்ட ஹன்ஸ்ராஜ் போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், சந்தோஷ்குமார், அதிகமாக வேலை வாங்கினார். ஆனால், சம்பளத்தை சரிவர தரவில்லை. மேலும், அவரின் வீட்டில் மூன்று ஆண்டுகள் நான் வேலை பார்த்தேன். இதனால் என்னை முழுமையாக அவர் நம்பினார். வீட்டில் உள்ள லாக்கரில் அடிக்கடி நகை, வெள்ளி ஆகியவற்றை அவர் வைப்பதை நான் பாத்திருக்கிறேன். சம்பளம் தராத ஆத்திரத்தில் லாக்கர் சாவியை எடுத்து அதில் உள்ள தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தேன். போலீஸிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சிசிடிவி கேமராவின் ஹாட் டிஸ்கையும் திருடிவிட்டுச் சென்றேன் என்று கூறியுள்ளார்.  புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் சினிமா பட பாணியில் துரிதமாக செயல்பட்டு போலீஸார் கொள்ளையர்களைப் பிடித்துள்ளனர்.