மத்திய அமைச்சர் வீட்டு முன்பு தற்கொலை போராட்டம்! - டெல்டா பாசன விவசாய சங்கம் எச்சரிக்கை | we will protest in front of central minister home If the request is not fulfilled farmers warn

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (09/01/2019)

மத்திய அமைச்சர் வீட்டு முன்பு தற்கொலை போராட்டம்! - டெல்டா பாசன விவசாய சங்கம் எச்சரிக்கை

காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக மாற்ற பா.ஜ.க அரசு கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறது. இச்செயலைக் கண்டித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் வீட்டின் முன்பு தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்திருக்கிறது.

                                            
இக்கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரனிடம் பேசுகையில்,  ``மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு வேண்டுமென்றே டெல்டா மக்களையும் தமிழகத்தையும் தொடர்ந்து வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் எப்படி வதைப்பாட்டாலும் மத்திய அரசுக்கு கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை கார்ப்பரேட் நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதுதான், அந்த வகையில் டெல்டா மாவட்டங்களை அழித்து அம்பானி, அதானிக்கு கையில் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் இறங்குகிறது. இதன் முதல் கட்டமாக கஜா புயலால் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டார்கள். ஆனால், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. 

                                             

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டதை வேதாந்தா நிறுவனமும் ஓ.என்.ஜி.சி நிறுவனமும் அனுமதி அளித்தது. இதைத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு எனது தலைமையில் டெல்லியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகத்தின் முன்பு அந்த ஒப்பந்த நகலை எரித்து மாபெரும் போராட்டத்தை நடத்தி எங்களது எதிர்ப்பைப் பதிவு பதிவுசெய்தோம்.

                                                

இது இப்படி இருக்கும் சூழலில் தமிழக விவசாயிகள் குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகளை நெஞ்சில் வேல் கொண்டு குத்தும் விதமாக காவிரிப்படுகையில் 474.19 சதுர கிலோமீட்டரில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக இரண்டாம் கட்டம் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு கடந்த திங்கள்கிழமை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது. இச்செயலைக் கடுமையாக கண்டிக்கிறோம். இந்தத் திட்டத்தை உடனடியாக காவிரி டெல்டா பகுதிகளில் செயல்படுத்தக் கூடாது. காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் டெல்லியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டின் முன்பு காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எனது தலைமையில் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம்'' எனக் கொந்தளித்தார்.