வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:04:00 (10/01/2019)

இந்தியாவில் 39 விநாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழக்கிறது - யுனிசெப் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

 உரிய கவனிப்பு இல்லாததால் இந்தியாவில் 39 விநாடிக்கு ஒரு குழந்தை உயிரிழந்து வருகிறது.பத்திரிகையாளர் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்.

கருத்தரங்கு
 

யுனிசெப் நிறுவனமும் சென்னையில் உள்ள தோழமை தொண்டு நிறுவனமும் இணைந்து குழந்தைகள் மீதான வன்முறைகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து செய்தியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.  யுனிசெப் நிறுவன ஊடக ஆலோசகர் அஜீத் மற்றும் மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்க ஏற்பாட்டினை பாலாஜி செய்திருந்தார்.ராமநாதபுரத்தில் நடந்த  இந்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய மூத்த பத்திரிகையாளர் திருமலை, ''நாட்டில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. உதாரணமாகச் சொல்வது என்றால் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றிய தகவலைச் சொல்ல தடை உள்ளது. ஆனால் ஸ்கேன் சென்டர் நடத்துபவர்கள் தங்களிடம் சோதனைக்கு வருபவர்களிடம் சமிக்‌ஞை மூலம் கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்து கூறி விடுகின்றனர். இதன் மூலம் கருவிலேயே பெண் சிசுக்கள் அழிவுக்குள்ளாகின்றன. இந்நிலையில் இந்தியாவில் வளர்ந்த மாநிலமாகக் கூறப்படும் குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு குறைவாகவே உள்ளது. 
 

பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் நாட்கள் ஊட்டச்சத்து அவசியம் என்ற நிலையில் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 3-ல் 2 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. நாட்டில் 50%குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர். 31% குழந்தைகள் ஏழ்மை நிலையில் உள்ளன. 2017-ம் ஆண்டில் மட்டும் 8 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். இதன்படி நாட்டில் 39 விநாடிகளுக்கு ஒரு குழந்தை இறக்கிறது. 

குழந்தைகள்
 

3ஆயிரம் கோடிக்கு சிலை, பொங்கலுக்கு இலவச பரிசு, ஒரே ராக்கெட்டில் 104 சாட்டிலைட் அனுப்பும் வல்லமை என எல்லாம் இருந்தும் குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்தைக் கொடுக்க முடியவில்லை. நாட்டில் 18 கோடி பேர் இரவு உணவு இன்றி உறங்கச் செல்கின்றனர். உலகில் ஏற்படும் குழந்தை இறப்புகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளில் மட்டும் 50% குழந்தைகள் இறக்கின்றனர். குழந்தைகள் மீதான வன்முறை ஆண்டுக்கு  11% அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.
 

இவை தவிர ஆண் பெண் குழந்தைகள் இடையே பாகுபாடு, குழந்தைகளின் உணர்வுகளை ஏற்காத நிலை, குழந்தைகளின் மனித மாண்புகள் கொச்சைப்படுத்துதல் போன்றவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மண், மரபு, பாரம்பாரியம் குறித்தும் எது நல்ல உணவு என்பது குறித்தும் சொல்லிக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

இந்த கருத்தரங்கினை துவக்கி வைத்த தோழமை தொண்டு நிறுவன இயக்குநர் தேவநேயன், ''குழந்தைகளை மையப்படுத்தும் செய்திகளை வெளியிடும் போது அவர்களின் மாண்பினை பாதிக்காத வகையில் செய்தி இருக்க வேண்டும். தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் தேக்க நிலையே காணப்படுகிறது. 2016-ல் பதிவு செய்யப்பட்ட 1543 வழக்குகளில் 199 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்த குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் குறித்து 2007-ம் ஆண்டுக்கு பின் தரவுகள் ஏதும் மத்திய மாநில அரசுகளிடம் இல்லை. இதை விடக் கொடுமை போக்சோ சட்டத்தினை கண்காணிக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது கூட தெரியவில்லை.

குழந்தைகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாததால் அரசியல்வாதிகளும் இதில் கவனம் கொள்வதில்லை. குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பிற்குக் கேரள அரசு ஆண்டுக்கு 7 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தமிழக அரசோ 55 லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலையே நீடிக்கிறது'' என அதிர்ச்சி அளித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலமாக  விருது வாங்கிய  தமிழகத்தில்தான் இத்தகைய அவல நிலையும் உள்ளது.