வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:06:13 (10/01/2019)

நாக்கில் கற்பூரம் ஏற்றிய அஜித் ரசிகர்கள்!’ - மேளதாளத்துடன் வேலூரில் ‘விஸ்வாசம்’ படக்கொண்டாட்டம்

வேலூரில் ‘விஸ்வாசம்’ படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் குதூகலப்படுத்தினர். நாக்கில் கற்பூரம் ஏற்றி படம் வெற்றியடைய வேண்டிக்கொண்டனர்.

விஸ்வாசம்

அஜித் நடிப்பில் இன்று (10-ம் தேதி) வெளியாகும், ‘விஸ்வாசம்’ படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் அலங்கார் உட்படப் பல திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகிறது. இந்த தியேட்டர்கள் முன்பு அஜித் ரசிகர்கள், ஏராளமான கட்-அவுட்களை வைத்துள்ளனர். அலங்கார் தியேட்டர் முன்பு 80 அடி உயரத்தில், அஜித் நிற்பதைப் போன்ற பிரமாண்ட கட்-அவுட் வைத்துள்ளனர். 

திருவிழா

நேற்றிரவு (9-ம் தேதி) இத்தியேட்டர் முன்பு சுமார் ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். இசை நிகழ்ச்சி, வாண வேடிக்கையுடன் மேள தாளம் முழங்கப் பட ரீலிஸை கோலாகலமாகக் கொண்டாடினர். திரையரங்கு வளாகத்திற்குள் கூடி ‘தல’ என்று கோரஸாக முழங்கி டான்ஸ் ஆடினர். படம் வெற்றிபெற சில ரசிகர்கள், நாக்கில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டனர். திருவிழாவைப் போல், விஸ்வாசம் பட ரிலீஸை அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரசிகர்கள்

அதே நேரத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை சீண்டுவதைப் போல், கட்-அவுட்டுகளில் வசனங்களையும் ரசிகர்கள் அச்சிட்டிருந்தனர்.