‘சென்னை தொழிலதிபரை கடத்திய கும்பல்!’ - ரூ.26 லட்சத்தைப் பறித்துக்கொண்டு விடுவித்தாகப் புகார் | Rowdy gang kidnap Chennai businessman

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (10/01/2019)

கடைசி தொடர்பு:07:40 (10/01/2019)

‘சென்னை தொழிலதிபரை கடத்திய கும்பல்!’ - ரூ.26 லட்சத்தைப் பறித்துக்கொண்டு விடுவித்தாகப் புகார்

சென்னை தொழிலதிபரை ஏமாற்றி வேலூருக்கு வரவழைத்த ரவுடி கும்பல், ஈரோட்டுக்கு கடத்திச்சென்றனர். லாட்ஜில் அடைத்துவைத்து கொடூரமாகத் தாக்கியதோடு, ரூ.26 லட்சத்தைப் பறித்துக்கொண்டு விடுவித்துள்ளனர்.

கடத்தல்

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் வில்சன் விமல் (44). ரியல் எஸ்டேட் செய்யும் தொழிலதிபர். கடந்த மாதம், இவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மாறி மாறிப் பேசிய இரண்டு நபர்கள், ‘வேலூரில் இருந்து விக்னேஷ் மற்றும் தமிழ்ச்செல்வன் பேசுவதாக’த் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். ‘‘வேலூரில் குறைந்த விலைக்கு நிலங்கள் விற்பனைக்குவருகிறது. மனைகளாக்கி விற்று அதிக லாபம் பார்க்கலாம்’’ என்று இருவரும் கூறினர். வில்சன் விமலும், பிசினஸை வேலூரிலும் விரிவுபடுத்தலாம் என்று ஆசைப்பட்டு, ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்துடன் தன்னுடைய காரில், கடந்த மாதம் 24-ம் தேதி சென்னையில் இருந்து வேலூர் வந்தார்.

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில், போனில் பேசிய இரண்டு நபர்களும் காத்திருந்தனர். வில்சன் விமல் வந்தவுடன், அவரின் காரை ஒரு ஹோட்டலில் நிறுத்தச்செய்தனர். வேறொரு காரில் வில்சன் விமலை ஏற்றிக்கொண்டு வேலூர் மற்றும் காட்பாடியில் பல்வேறு நிலங்களை போறபோக்கில் கைகாட்டி பில்டப் கொடுத்தனர். இதையடுத்து, குடியாத்தம் அழைத்துச்சென்றனர். வழியில், மேலும் 4 பேர் கும்பல் காருக்குள் ஏறினர். அதன்பிறகே, ‘தன்னை ஏமாற்றி வரவழைத்தது ரவுடி கும்பல்’ என்று வில்சன் விமலுக்குத் தெரியவந்தது.

ரவுடி கும்பலைச் சேர்ந்த 6 பேரும், கத்தியைக் காட்டி மிரட்டி காருக்குள் வைத்தே அவரைப் பயங்கரமாகத் தாக்கினர்.
இதையடுத்து, ஈரோடு பெருந்துறைக்கு கடத்திச்சென்றனர். அங்கு, ஒரு லாட்ஜில் அறையெடுத்து, வில்சன் விமலை இரண்டு நாள்கள் அடைத்துவைத்தனர். அவரிடமிருந்த 5 லட்சம் ரூபாயைப் பறித்துக்கொண்டனர். மேலும், வில்சன் விமலை கொடூரமாகத் துன்புறுத்தி அவரின் வங்கிக் கணக்கில் இருந்த மேலும் ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை, ஆன்லைன் பரிவர்த்தனைமூலம் தங்கள் வங்கிக் கணக்கிற்கு ரவுடி கும்பல் மாற்றியதாகக் கூறப்படுகிறது. மொத்தம் ரூ.26 லட்சத்து 20 ஆயிரத்தை சுருட்டிய பிறகு, தொழிலதிபர் வில்சன் விமலை ஈரோட்டில் ஒரு பகுதியில் இறக்கிவிட்டு, ரவுடி கும்பல் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக, ஈரோடு மற்றும் சென்னை காவல்துறையில் தொழிலதிபர் வில்சன் விமல் புகார் அளித்தும், போலீஸார் ஏற்கவில்லை. இதனால், வேலூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேற்று (9-ம் தேதி) வந்தார். எஸ்.பி பிரவேஷ்குமாரை நேரில் சந்தித்து, தனக்கு நடந்தவற்றைப் புகாராகக் கூறினார். உடனடியாக, வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜனை வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீஸார், வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி பணம் பறித்த ரவுடி கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.ஆன்லைன் பரிவர்த்தனையில் பணம் பறிக்கப்பட்டதால், தொழில்நுட்ப ரீதியாக ரவுடிகளின் வங்கிக் கணக்கை கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும் போலீஸார் தீவிரம்காட்டிவருகின்றனர்.