வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (10/01/2019)

கடைசி தொடர்பு:09:10 (10/01/2019)

“15 தொகுதிகளைக் கைப்பற்றினாலே போதும்!” - ஊராட்சி சபை கூட்டத்தில் தயாநிதி மாறன் உற்சாகம்

‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தும் முயற்சியில் தி.மு.க இறங்கியிருக்கிறது.

தி.மு.க

திருவாரூரில் ஸ்டாலினே இதை ஆரம்பித்துவைக்க, கட்சியின் மற்ற முக்கியப் பிரமுகர்களை வைத்து  பிற பகுதிகளிலும் ஸ்டாலின்  ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில், ஈரோட்டில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி சபை கூட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில், பொங்கலுக்குப் பின் 15 நாள்கள் தங்கியிருந்து, இன்னும் பல இடங்களில் நடக்க உள்ள ஊராட்சி சபைக் கூட்டங்களில் தயாநிதி மாறன் கலந்துகொள்ள இருக்கிறார். நேற்று காலையில் ஆரம்பித்த ஊராட்சி சபைக் கூட்டம் மாலையில் முடியும் வரை உற்சாகமாகவே இருந்த தயாநிதி மாறன், பொதுமக்களின் ஒவ்வொரு கோரிக்கையையும் கூர்ந்து கவனித்து, அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.

தி.மு.க

கூட்டத்தில் பேசிய தயாநிதி மாறன், “மக்களை நேராக சந்தித்து, அவர்களுடைய பிரச்னைகளைத் தெரிந்துகொண்டு தீர்வு காண வேண்டும். 'மக்களைச் சந்திப்போம், மனதை வெல்வோம்' என்று ஸ்டாலின் களத்தில் இறங்கியிருக்கிறார். நீங்களும் எங்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள். ‘நாம இவ்வளவு கோரிக்கை வச்சிருக்கோம். அது எல்லாம் நிறைவேறுமா!’ என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படும். மூன்று மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தைச் செய்யக்கூடிய வலிமை உங்களிடத்தில் இருக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த முறையாவது நல்ல முடிவை எடுங்கப்பா... நாடாளுமன்றத் தேர்தலுடன், 21 தொகுதிக்கான தேர்தலும் வரவிருக்கிறது. அதில், 15 தொகுதிகளை நாம் கைப்பற்றினால், ஆட்சி நம்முடைய வசம்தான். தளபதி மு.க.ஸ்டாலின்தான் அடுத்து நம்முடைய முதலமைச்சர்” என உற்சாகமாகத் தெரிவித்தார்.