வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (10/01/2019)

கடைசி தொடர்பு:10:57 (10/01/2019)

தியேட்டரில் இருக்கைக்கு தகராறு! - அஜித் ரசிகர்களுக்கு கத்திக்குத்து; ஆபத்தான நிலையில் சிகிச்சை

வேலூரில் உள்ள தியேட்டரில், 'விஸ்வாசம்' படம் பார்ப்பதற்காக இருக்கை பிடிக்கும் தகராறில், அஜித் ரசிகர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காயம் அடைந்த அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. வேலூரில் உள்ள அலங்கார் தியேட்டரில், அஜித் ரசிகர்கள் நேற்றிரவு மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் குதூகலப்படுத்தினர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு தியேட்டருக்குள் ஓடினர். அப்போது, இருக்கை பிடிப்பதில் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 20 பேர் கொண்ட கும்பல், இருக்கை தர மறுத்த காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (18) மற்றும் அவரின் மாமா ரமேஷ் (30) ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கினர்.

 ஆத்திரம் அடங்காமல், மறைத்து எடுத்துவந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில், அவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். வெட்டிய கும்பல், தியேட்டரில் இருந்து தப்பி ஓடிவிட்டது. தியேட்டருக்குள் சரிந்து கிடந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பிரசாந்த்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, வேலூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவுசெய்து, தப்பி ஓடிய கும்பலைத் தேடிவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ரசிகர்கள் இருவரை வெட்டிய கும்பல், வேலூர் தோட்டப்பாளையம் மற்றும் ஓல்டு டவுனை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.