வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (10/01/2019)

கடைசி தொடர்பு:11:45 (10/01/2019)

படம் பார்க்க பணம் தராததால் ஆவேசம்! - தந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மகன்

காட்பாடியில், ‘விஸ்வாசம்’ படம் பார்க்க டிக்கெட் எடுக்கப் பணம் தராததால், தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது செய்யப்பட்டார்.

 பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற தந்தை

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). இவரின் மகன் அஜித்குமார் (20). தீவிர அஜித் ரசிகர். இவர், இன்று அதிகாலை வெளியான ‘விஸ்வாசம்’ படம் பார்ப்பதற்காக, ‘டிக்கெட்’ எடுக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.  பணம் தர மறுத்ததால், தந்தை மீது அவர் ஆத்திரத்தில் இருந்தார்.  தூங்கிக்கொண்டிருந்த தந்தை பாண்டியனை கொலைசெய்ய நினைத்த அஜித்குமார், பெட்ரோலை முகத்தில் ஊற்றி தீ வைத்தார்.

விஸ்வாசம் -அஜித் ரசிகர்
 

தீ பற்றியதால், தலை மற்றும் முகத்தில் பாண்டியனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுசம்பந்தமாக, விருதம்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தந்தையைத் தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற அஜித்குமாரை கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஜினி  ரசிகர்

குடியாத்தம் ஜெய் இந்திரா நகரைச் சேர்ந்த நகைத் தொழிலாளி, சரவணன் (40). ரஜினி மக்கள் மன்றத்தில் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இன்று ரிலீஸான ‘பேட்ட’ படத்தைப் பார்ப்பதற்காக, குடியாத்தம் காமராஜர் பாலம் அருகில் உள்ள மகாலட்சுமி தியேட்டருக்குச் சென்றார். அப்போது, ரசிகர்கள் சிலர் சரவெடி பட்டாசு கொளுத்தி தூக்கியெறிந்தனர். சரவணன் மீது பட்டாசு விழுந்து வெடித்ததில், அவர் பலத்த காயமடைந்து துடிதுடித்தார். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.