வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:15:07 (10/01/2019)

ஆர்வக்கோளாறில் திரையைக் கிழித்த அஜித் ரசிகர்கள்! - கொதிப்பில் தியேட்டர் நிர்வாகம்

தேனியில் `விஸ்வாசம்' திரையிடப்பட்ட தியேட்டர் ஸ்கிரீன், ரசிகர்கள் ஆர்வக்கோளாறால் கிழிந்தது. இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர் அப்செட் ஆயினர்.

விஸ்வாசம்

நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இன்று வெளியான விஸ்வாசம் திரைப்படம், அஜீத் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராக நடித்திருப்பதால் தேனியில் அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டர்கள் வாசலில் குவியத் தொடங்கினர். இதில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 8 திரையரங்குகளில் `விஸ்வாசம்' திரைப்படம் திரையிடப்பட்டது.

இதில் தேனியில் உள்ள கிருஷ்ணா திரையரங்கில் திரையில் அஜித் தோன்றியவுடன்  திரைக்கு முன்பு கும்பலாக ஆடத்துவங்கினர். ஆர்வக்கோளாறு காரணமாக திரை மீது சிலர் விழுந்ததில் 2 அடி நீளத்துக்கு திரை கிழிந்தது. இதன் காரணமாக சில நிமிடங்கள் படம் நிறுத்தப்பட்டது. ரசிகர்களின் உற்சாகம் மற்றும் ஆரவாரத்தைப் பார்த்த தியேட்டர் நிர்வாகத்தினர், திரையை தற்காலிகமாக சரிசெய்து படத்தை திரையிட்டனர். ரசிகர்களின் ஆர்வக்கோளாறால் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால் தியேட்டர் நிர்வாகத்தினர் வருத்தமடைந்தனர். அஜீத் ரசிகர்களை அவர்களால் கண்டிக்கவும் முடியவில்லை. இச்செயலை செய்தது யார் என கண்டுபிடிக்கவும் முடியவில்லை.