வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (10/01/2019)

கடைசி தொடர்பு:15:25 (10/01/2019)

`பழைய நண்பர்களைச் சந்தோஷமாக வரவேற்போம்’- கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க-வினரிடம் மோடி பேச்சு

மக்களவைத் தேர்தலுக்கு தமிழகம், புதுச்சேரி மாநில பா.ஜ.க-வினரைத் தயார்படுத்தும்விதமாக, தொகுதிவாரியாகப் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்திவருகிறார்.

மோடி

கடந்த மாதம் புதுச்சேரியில் உள்ள நிர்வாகிகளுடன் பேசினார். இன்று அரக்கோணம், ஈரோடு, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளின் நிர்வாகிகளுடன் வீடியோவில் பேசினார். அவர் பேசுகையில்,  ``தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதர மற்றும் சகோதரிகளுக்கு என் பொங்கல் வாழ்த்துகள். இந்த நல்ல நாளில் அனைவரும் மகிழ்ச்சியுடன் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டுகிறேன். மேலும், இதே நாளில் கடினமாக உழைக்கும் விவசாயிகளும் நல்ல வளம் பெற வேண்டுகிறேன். 20 வருடங்களுக்கு முன் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திய அரசியலில் ஒரு புதிய கூட்டணி கலாசாரத்தைக் கொண்டுவந்தார்.

வாஜ்பாயின் வழியில் எப்போதும் பா.ஜ.க பயணிக்கும்.  இந்தக் கட்சி தனியாக நின்று வெற்றி பெற்றாலும் பா.ஜ.க அரசைக் கூட்டணிகளுடன் இணைத்துச் செயல்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். பழைய நண்பர்களை நாங்கள் சந்தோஷமாக வரவேற்கிறோம். அந்தக் கட்சிகளுக்காக பா.ஜ.க-வின் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும். ஆனால், மற்ற கூட்டணிகளைவிட மக்களின் கூட்டணிதான் வெற்றி பெறும். 

தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவைதான் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், அவர்கள் நமது நாட்டின் ஆயுதப் படையைக் கூட ஆழமாகச் சேதப்படுத்தியுள்ளனர். பாதுகாப்புத் துறையை பல ஆண்டுகளாக புரோக்கர்களின் கூடாரமாக வைத்திருந்தது காங்கிரஸ். சமீபத்தில் பாதுகாப்புத் துறை தொடர்பாக சிக்கிய ஒரு புரோக்கர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் காங்கிரஸின் முதல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். நமது பாதுகாப்பு கொள்முதல் மீதான தாக்குதலுக்குப் பின்னால் காங்கிரஸை சார்ந்தவர்கள்தான் அதிகம் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.