மூடிக்கிடந்த வீட்டுக் கதவு.. ஹாரன் அடித்த கலெக்டர்... போதையில் கிடந்த போலீஸ்காரர் #Ramanathapuram | Ramanathapuram district collector camp guard lying unconscious

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (10/01/2019)

மூடிக்கிடந்த வீட்டுக் கதவு.. ஹாரன் அடித்த கலெக்டர்... போதையில் கிடந்த போலீஸ்காரர் #Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மது போதையில் மயங்கிக் கிடந்ததால் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் இல்லம் லேத்தம்ஸ் பங்களா சாலையில் உள்ளது. இங்கு மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகமும் இயங்கி வருகிறது. இதையொட்டி முகாம் அலுவலக நுழைவில் போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசரம் நிமித்தமாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வரும் அரசு அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் போலீஸாரின் அனுமதி பெற்ற பின்னரே முகாம் அலுவலகத்துக்குச் செல்ல முடியும்.

மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக காவலர் இடை நீக்கம்.


இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் செவ்வாய்க் கிழமை இரவு அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆட்சியர் வந்த காரின் ஓட்டுநர் முகாம் அலுவலக கேட்டை திறப்பதற்காக ஹாரன் அடித்துள்ளார். நீண்ட நேரமாக ஹாரன் அடித்தும் கேட் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஆட்சியர் வாகனத்தின் ஓட்டுநர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படைக் காவலரான ரபீக் முகம்மது மது போதையில் மயங்கிக் கிடந்துள்ளார்.
 
இது குறித்து மாவட்ட ஆட்சியர்  சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மது போதையில் இருந்த காவலர் குறித்து விசாரணை நடத்த ஆயுதப்படை டி.எஸ்.பி-க்கு எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டார். இந்த விசாரணையின்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் காவலர் ரபீக் அகமது மது போதையில் இருந்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து பணி நேரத்தில் மது போதையில் இருந்த காவலர் ரபீக் அகமதுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.