வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (10/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (10/01/2019)

`நிலுவைத் தொகையைத் தாருங்கள்!'- சடலம்போல் நடித்து ஒப்பாரி போராட்டம் நடத்திய விவசாயிகள்

கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை பெற்றுத் தரக் கோரி விருத்தாசலத்தில் விவசாயிகள் ஒப்பாரி வைத்து நான்காவது நாளாகப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நாளை மண்டை ஓட்டுடன் போராட்டம் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அய்யாக்கண்ணு தலைமையில் ஒப்பாரி போராட்டம் நடத்தும் விவசாயிகள்

விருத்தாசலம் பாலகரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையைக் கேட்டு விவசாயிகள்  நான்காவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 2016-17 மற்றும் 2017 -18-ம் ஆண்டுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை வழங்காத ஆலை நிர்வாகத்திடமிருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும், ஐந்து ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள பாக்கித் தொகை 93 கோடியை உடனே வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் அறிவித்தனர்.

7-ம் தேதி முதல் நாள் காத்திருக்கும் போராட்டமும், இரண்டாவது நாள் 8-ம் தேதி உடலில் நாமம் அணிந்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளான நேற்று 9-ம் தேதி எலி, பாம்புக் கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று சேரில் சடலம் மாதிரி மனிதரை உட்கார வைத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை மண்டை ஓட்டுடன் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.